திங்கள், 3 டிசம்பர், 2012

ஒருமணி நேரப் பணிப் பகிஷ்கரிப்பினை மேற்கொள்ளுமாறு, வடக்கு - கிழக்கு மக்களுக்கு கூட்டமைப்பு அழைப்பு.

News Serviceஒருமணி நேரப் பணிப் பகிஷ்கரிப்பினை மேற்கொள்ளுமாறு, வடக்கு - கிழக்கு மக்களுக்கு கூட்டமைப்பு அழைப்பு. கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும், தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் நாளை நடத்தவுள்ள சாத்வீகப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று த.தே.கூட்டமைப்பு இளைஞர் அணி அழைப்பு விடுக்கிறது. பகல் 11.00 மணி முதல் 12.00 மணிவரையான ஒரு மணி நேரத்தில் வடக்கு - கிழக்கில் உள்ள அனைத்துத் தமிழ் மக்களும் தமது பணிகளைத் தத்தம் இடங்களிலேயே இடைநிறுத்தி இன்றைய சாத்வீகப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று இளைஞர் அணி கேட்டுக்கொள்கிறது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அமைதியான போராட்டம் சிறிலங்கா அரச படைகளால் மிருகத்தனமாக அடக்கப்பட்டது. மாணவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தமது கருத்தை வெளிப்படுத்துவதற்கு மாணவர்களுக்கு இருந்த உரிமை மறுக்கப்பட்டு அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அத்துடன் இந்தத் துயரம் நின்றுவிடவில்லை. அன்றைய போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைப் பழிவாங்கும் நோக்கத்துடனும் தமிழ் மக்களை மிரட்டிப் பணிய வைக்கும் நோக்கத்துடனும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் நால்வர் பயங்கரவாதப் புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழர்கள் தமது உரிமைக்காக அமைதி வழியில் போராடினாலும் அதனைப் பயங்கரவாதமாகக் காட்டுவதற்கே இந்த அரசு முயற்சிக்கிறது. இதனையே முன்னைய காலங்களிலும் இலங்கை அரசுகள் மேற்கொண்டிருந்தன. இலங்கை அரசின் இத்தகைய போக்கு தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி இரண்டாம் தரப் பிரஜைகளாக வைத்திருக்க வேண்டும் என்ற அதன் உள்மன விருப்பத்தின் வெளிப்பாடே. அரசின் இந்த நோக்கத்தைத் தகர்த்து எறிந்து நாமும் சரிநிகர் சமானமாக வாழ்வதற்கான முயற்சியாக ஒரு மணிநேரம் அனைவரும் பணிகளை இடைநிறுத்தி வைத்து போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். இராணுவத்தினராலும் பொலிஸாராலும் தம்மைப் புலனாய்வாளர்கள் என்று சொல்லிக் கொள்வோராலும் இதற்காக நீங்கள் மிரட்டப்படலாம் அச்சுறுத்தப்படலாம். சிலவேளைகளில் துன்புறுத்தல்களைக்கூட எதிர்கொள்ளலாம் என்பதைப் புரிந்துகொள்கிறோம். அவற்றையெல்லாம் தாண்டி அல்லது சமாளித்து இந்தப் பேராட்டத்தில் முடிந்தவர்கள் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி கேட்டுக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக