சனி, 8 டிசம்பர், 2012

சவேந்திர சில்வாவை போர்க்குற்றவாளி என்று தென்னாபிரிக்கா நிராகரித்தத

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களோடு சம்மந்தப்பட்டவர் என்று செயற்பாட்டாளர்களால் வர்ணிக்கப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை தென் ஆப்பிரிக்காவுக்கான இலங்கைத் துணை தூதராக நியமிப்பதை அந்த நாடு ஏற்கவில்லை என்று ஒரு வழக்காடும் அமைப்பு தெரிவித்துள்ளது.சவேந்திர சில்வாவை தென்னாபிரிக்காவுக்கு அனுப்பும் முடிவை அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதை உறுதிப்படுத்தும் இலங்கை அமைச்சர் ஒருவர், தென்னாபிரிக்காவின் தயக்கம் குறித்து தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்கிறார்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது வன்னியில் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 58 வது படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது போர் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்திருக்கின்றன.

போருக்குப் பிறகு ஐ. நாவுக்கான இலங்கைத் துணைத் தூதராக இவர் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தை எதிர்த்து அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டது.

விடுதலைப் புலிகளின் தளபதியான கேணல் ரமேஷ் உயிரோடு பிடிக்கப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் கீழியங்கிய படையணி மீது குற்றம் சாட்டப்பட்டது.

கட்டளைத் தளபதி என்ற முறையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இது தொடர்பில் பொறுப்பேற்க வேண்டும் என்று செயற்பாட்டாளர்கள் வாதிட்டனர்.

ஆயினும் இராஜதந்திரிகளுக்கான வழக்கு விலக்கு நடைமுறையை காரணம் காட்டி அமெரிக்க நீதிமன்றம் அந்த வழக்கை நிராகரித்தது.

தற்போது இவர் தென்னாபிரிக்காவுக்கான இலங்கைத் துணைத் தூதராக நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வந்த உடனேயே சில மனித உரிமை அமைப்புகளும், அங்குள்ள சில தமிழ் அமைப்புகளும் இதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தின.

தற்போது இந்த நியமனம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கூறுகிறார் தென்னாப்பிரிக்க லிடிகேஷன் செண்டர் என்னும் அமைப்பின் இயக்குனரான நிக்கோலா பிரிட்ஷ்.

இருந்தபோதிலும் இரு அரசாங்கங்களும் அதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்று அவர் கூறினார்.

அதேவேளை தென்னாபிரிக்காவுக்கான துணைத் தூதுவராக சவேந்திர சில்வாவை இலங்கை பரிந்துரைத்ததை ஒப்புக்கொள்ளும் இலங்கை அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல அவர்கள், அவரை தென்னாபிரிக்கா நிராகரித்த்தா இல்லையா? என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.

இந்த விடயம் குறித்து தாம் கருத்து தெரிவிக்க முடியாது என்று தென்னாபிரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக