செவ்வாய், 11 டிசம்பர், 2012

ஹம்பாந்தோட்டை கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது பௌத்த பிக்குகள் நடாத்திய தாக்குதலுக்கு கூட்டமைப்பு கண்டனம்.

News Serviceஹம்பாந்தோட்டை வீரஹெட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவமானது இந்த நாட்டை புத்த பிக்குகளே ஆளும் தரப்பினராக எடுத்துக்காட்டுவதாகவும் குறித்த தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நேற்று ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஹம்பாந்தோட்டை வீரஹெட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை விசேட திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது சுமார் 80 பௌத்த பிக்குகள் தலைமையில் வந்த ஆயிரம் பேர் அடங்கிய கும்பலொன்று தேவாலயத்தினுள் அத்துமீறி உள்நுழைந்து அங்கிருந்த வாகனங்களை உடைத்து சேதப்படுத்தியதோடு தீ வைத்தும் கொளுத்தியுள்ளது. அத்துடன் ஆலய பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது ஆலயத்தினுள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பலர் காயமடைந்துள்ளனர். கடந்த 11 வருடங்களுக்கு மேலாக குறித்த தேவாலயம் அவ்விடத்தில் அமைந்திருந்த போதும் ஆலயத்தின் சகல நடவடிக்கைகளையும் பௌத்த பிக்குகளிடமே அனுமதி பெற்றே செய்ய வேண்டிய நிலை இருக்கின்றது.

குறித்த ஆலயம் மீதான தாக்குதல் உட்பட நாட்டில் பௌத்த பிக்குகளினால் பல கிறிஸ்தவ தேவாலயங்கள்,பள்ளி வாயல்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களின் மூலம் சிறுபான்மையின மக்களுக்கு இந்த நாட்டில் எவ்வித உரிமைகளும், சுதந்திரமும் இல்லை என்பதனை எடுத்துக்காட்டுகின்றது. இந்த சம்பவங்களின் மூலம் பௌத்த பிக்குகளே இந்த நாட்டை ஆளும் தரப்பாக வெளிப்படையாக காட்டுகின்றது. ஹம்பாந்தோட்டை மாவட்டமானது ஜனாதிபதியின் மாவட்டமாக காணப்படுகின்ற போதும் அங்குள்ள கிறிஸ்தவ மக்களுக்கும்,அங்குள்ள ஆலயங்களுக்குமான பாதுகாப்புக்கள் இன்று கேள்விக்குறியாகியுள்ளன. தொடர்ந்தும் பௌத்த பிக்குகள் இவ்வாறான செயலில் ஈடுபடுவதன் மூலம் இந்த நாட்டில் அனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்த முடியாது.

எனவே ஏற்கனவே பல வணக்கஸ்தலங்கள் பௌத்த பிக்குகளின் தலைமையில் உடைத்து சேதப்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்று அந்த தாக்கம் மறைவதற்கு முன் ஜனாதிபதியின் மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் உள்ள கிறித்தவ தேவாலயத்தின் மீதும்,அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் மிகவும் வேதனையளிக்கின்றது. இதனை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது. எனவே இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி உடன் தலையிட்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக