குற்றவியல் பிரேரணை குறித்த போராட்டத்தில், அரசாங்கமும், நீதித்துறையும் தோல்வி அடைந்திருப்பதாகவும், ஆளும் கட்சியில் உள்ள அனைவரும் ஜனாதிபதியின் பொம்மலாட்ட பாவைகளாக செயற்பட்டு வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியினால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் இந்த கருத்து வெளியிடப்பட்டது. இந்த விடயத்தில் நீதித்துறை மாத்திரமே தோல்வி அடைந்திருப்பதாக அனைவரும் கூறுகின்றார்கள். ஆனால் இதில் அரசாங்கமும் தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில் இந்த பிரச்சினை நிறைவடைந்து விட்டதாக கருத முடியாது. இனிதான் புதிய பிரச்சினைகள் ஆரம்பிக்கும் என்றும் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியில் உள்ள அனைவரும் ஜனாதிபதியின் பொம்மலாட்ட பாவைகளாக செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதேவேளை, தற்போதைய பிரதம நீதியரசரை பதவி விலக்குவது தொடர்பான உத்தரவை ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஆகியோர் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிடம் கையளித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தின் தகவலின் படி, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களினதும் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் பிரேரணை ஜனாதிபதியினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 11 ம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய பிரதம நீதியரசரை பதவி விலக்கும் உத்தரவு பத்திரத்தில் ஜனாதிபதி இன்று காலை கையெழுத்திட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 107 இன் 2 ஆம் சரத்திற்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக