பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க முதற்தடவையாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்து தனது நிலைப்பாட்டை விளக்கத் தீர்மானித்துள்ளார்.
இதற்கான விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று அல்லது நாளை நடைபெறும் என தெரியவருகிறது. தனக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட நாள் முதல் இதுவரை அது தொடர்பில் எதுவித கருத்துகளையும் பிரதம நீதியரசர் தெரிவிக்கவில்லை. அவரது சட்டத்தரணிகளே ஊடகங்களுக்குப் பதில்களை வழங்கிவந்தனர். இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று கையொப்பமிட்டு அதனை அனுப்பியுள்ள நிலையில், இது விடயத்தில் இதற்கு மேலும் மௌனம் காக்காதிருக்க முடியாது என கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க தீர்மானித்துள்ளார்.
நீதித்துறையில் தாம் ஆற்றிய சேவைகள், சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்பன தொடர்பில் இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் விரிவான விளக்கங்களை வழங்குவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
ஷிராணிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் -அமெரிக்க தூதரகம் மன வருத்தத்தம்
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தனது மன வருத்தத்தை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்;கையின் அதிகாரங்களை பகிர்ந்து வைப்பது, ஜனநாயக நிறுவனங்களில் அழுத்தங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஏற்பட்டது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இடம்பெற்ற பல வன்முறை செயற்பாடுகள் குறித்தும் அமெரிக்க தூதரகம் வருத்தமடைந்துள்ளது. அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்தும் உரிமையை மதிக்குமாறு அனைத்து தரப்பினரிடம் கேட்டுக்கொள்வதாகவும் வன்முறையற்ற பேரணிகளில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாகவும் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரித்தானியா கோரிக்கை:-
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரித்தானிய அரசாங்கம், இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது. ஜனநாயக நெறிமுறைகளுக்கு அமைவாக அமைதியான எதிர்ப்புகளை வெளியிடவும் சட்டத் தொழிலின் கௌரவர்தை பாதுகாத்து, பிரதம நீதியரசரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என பிரித்தானியா கேட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் நாடாளுமன்றத்தில் பிரதம நீதியரசருக்கு எதிராக விவாதித்து நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து பிரித்தானிய அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாகவும் இது தொடர்பாக எதிர்ப்புகளை வெயியிட்டுள்ள சர்வதேச நாடுகள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டுள்ளதாகவும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நியாயத்திற்கும், சட்டத்திற்கும் முரணானது என இலங்கை உயர்நீதிமன்றம் தீர்மானத்திருந்தது. இதனால் சட்டத்தின் ஆளுமையை மதித்து, உரிய செயற்பாடுகளின் அடிப்படையில் செயற்படுமாறு இலங்கையை கேட்டுக்கொள்வதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்டமை குறித்து பிரதம நீதியரசர் இன்று கருத்து வெளியிடுவார்?
பணி நீக்க உத்தரவு தொடர்பில் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க இன்று கருத்து வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் அடிப்படையில் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பிரதம நீதியரசர் அதிகளவில் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்குவதில்லை எனவும், ராஜகிரியவில் அமைந்துள்ள தனிப்பட்ட இல்லத்திலேயே அதிகம் தங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்படட்தாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், தமது நிலைப்பாட்டை கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க இன்று உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக