பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் விசாரணை நடாத்திய பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு கால வரையறைகளை நிர்ணயிக்க முடியாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி தீர்மானம் எடுப்பார் எனவும், அதற்கு கால வரையறைகளை நிர்ணயிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் 72 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிலர் பிரச்சாரம் செய்து வரும் தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பு எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவே பொறுப்பு என ஊடக அமைச்சரும் அரசாங்கப் பேச்சாளரமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் கொழும்பில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற சட்டத்தரணிகளின் போராட்டத்திற்கு பிரதம நீதியரசரே பதில் சொல்ல வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.நேற்றும் இன்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவதில்லை என சட்டத்தரணிகளும் நீதவான்களும் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.நேற்றைய தினம் நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நாட்டில் இடம்பெற்று வரும் குழப்ப நிலைமைகளுக்கு பிரதம நீதியரசர் பொறுப்பு சொல்ல வேண்டுமென அமைச்சர் கெஹலிய குற்றம் சுமத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக