பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போது வெலிகந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஏனைய இரண்டு மாணவர்களும் அடுத்த மாதமளவில் விடுதலை செய்யப்படுவார்களென இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாணவர்களை விடுவிப்பதற்கான கால எல்லை உறுதி செய்யப்படவில்லை. மாணவர்களுடைய செற்பாடுகளைப் பொறுத்து அடுத்த மாதத்தில் எந்நேரமும் அவர்கள் விடுவிக்கப்படலாமென யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கொழும்பிலிருந்து செயற்படும் ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்குக் கூறியுள்ளார்.கடந்த நவம்பர் மாத இறுதியில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேரில் இரண்டு மாணவர்கள் தொடர்ந்தும் வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் இருவரும் தமது புனர்வாழ்வைப் பூர்த்தி செய்யவில்லை என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இதனாலேயே அவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றனர்.
அனேகமாக அவர்கள் இருவரும் அடுத்த மாதத்தில் விடுவிக்கப்படுவார்கள். மேலும் விரைவில் நடைபெறவுள்ள பல்கலைக்கழக பரீட்சையிலும் அவர்கள் தோற்ற முடியுமெனவும் ஹத்துருசிங்க கூறியுள்ளார்.
இதேவேளை இந்த இரு மாணவர்களின் விடுதலை தொடர்பில் தமக்கு எந்த அறிவித்தல்களும் இதுவரை உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை என பல்கலைக்கழக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விடுவிக்கப்பட்டால் அவர்கள் தங்களது பரீட்சைகளில் தோற்ற முடியும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் பி.தர்சானந் மற்றும் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கே.ஜெனமேஜெயம் ஆகியோரே தற்போதும் வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.
ஏனைய இரண்டு மாணவர்களான யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வி.பவானந்தன்இ விஞ்ஞான பீட 3 ஆம் வருட மாணவன் சொலமன் ஆகியோர் அண்மையில் வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் வைத்து அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை தெரிந்ததே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக