செவ்வாய், 15 ஜனவரி, 2013

தமிழர் நிலங்களை முஸ்லிம் பிரதேச செயலகங்களுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட பிரதேச செயலக நிர்வாகத்திலுள்ள நிலங்களை துண்டித்து முஸ்லிம்களை பெரும்பான்மையாக உள்ளடக்கிய பிரதேச செயலகங்களுடன் இணைக்க எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தீர்மானத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பொது நிர்வாகம் மற்றும் உள் நாட்டு அலுவல்கள் அமைச்சிலிருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்த அமைச்சின் துணை செயலாளர் ஒருவர் அதிகாரிகளுடன் மட்டும் கலந்துரையாடி விட்டு தன்னிச்சையாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக நேற்று (14) தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா கூறினார். பிரதேச செயலக நிர்வாக பிரிவொன்றின் எல்லைகள் மாற்றப்படும்போது மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை பெறுகின்ற நடைமுறை இந்த விடயத்தில் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். தாங்கள் அறிந்தவரை பிரதி அமைச்சர் வீ.முரளிதரன், மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி ஆகியோர் மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழர்கள் பெரும்பான்மையாக வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள ஒரிரு கிராம சேவை அதிகாரி பிரிவுகள் முறையே முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கோறளைப்பற்று மத்தி மற்றும் ஒட்டமாவடி பிரதேச செயலக நிர்வாகத்துடன் இணைக்கப்படுவதாகவும், இதனை மீளாய்வு செய்யுமாறு பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரை தாம் கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ள எதிர்ப்பு மற்றும் ஆட்சேபணை நியாயமற்றது என்று மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். அமீர் அலி கூறினார். விடுதலைப் புலிகள் காலம் தொடக்கம் இந்த எல்லை தீர்மானம் தொடர்பான பிரச்சினை இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் ஏற்கனவே தான் பேசியதாகவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக