வெள்ளி, 4 ஜனவரி, 2013

கொழும்பில் வன்முறைகள் வெடிக்க வாய்ப்புள்ளதாக ஆருடம் - சவேந்திர சில்வாவுக்கு அழைப்பு

News Serviceஅதிகார மோதல் உக்கிரமடைந்துள்ளதால், போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் வெடிக்க வாய்ப்புள்ளதாக ஆருடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உணர்ந்து கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளரான கோத்தாபய ராஜபக்ச பல உத்திகளை முன்னெடுத்து வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கட்டான சூழ்நிலையை சமாளிப்பதற்காக கோத்தாபயவின் விசுவாசியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது, மக்கள் எழுச்சி கொள்ளச் சாத்தியம் இருப்பதால், அதை அடக்குவதற்காக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. தற்போது நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான பிரதித்தூதுவராகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு இருவார பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை கோத்தாபய அளித்துள்ளார். இதையடுத்து மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கொழும்புக்கு பயணமாவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். 2010ம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் போது, சினமன்கிரான்ட் விடுதியில் சரத் பொன்சேகாவை தடுத்து வைத்திருந்த போது, ராஜபக்ச அரசாங்கத்துக்காக எல்லாவிதமான உதவிகளையும் புரிந்தவர் சவீந்திர சில்வா என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் எட்டாம் திகதி பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக