தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு எதிராக சாட்சியமளித்திருந்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.பாராளுமன்ற விவாகாரங்கள் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுவதற்கு முன்னதாக இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் எந்தவிதமான அனுமதியையும் பெற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் சாட்சியமளித்தார்களா என்பது தமக்கு தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சாட்சியமளித்திருந்தால் பாராளுமன்ற விசேட சிறப்புரிமை சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றை அவமரியாதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றின் சட்ட விளக்கமானது பாராளுமன்ற நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு இருக்கும் அதிகாரங்களை செயற்படுத்தும் பணிகள் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படவில்லை - பிரதி சபாநாயகர்
நாடாளுமன்றத்திற்கு இருக்கும் அதிகாரங்களை செயற்படுத்தும் பணிகள் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதால், கட்சி தலைவர்கள் தீர்மானிக்கும் தினத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவான அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(03) வழங்கிய தீர்ப்பு தொடர்பாக கருத்து வெளியிடும் போதே பிரதி சபாநாயகர் இதனை கூறியுள்ளார்.
அனுர பண்டாரநாயக்க சபாநாயகராக இருந்த போது, வழங்கிய தீர்ப்பு ஒன்றின் அடிப்படையில் தற்போதைய சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷவினால் தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நீதிபதிகளை நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்தின் பணி, இந்த பணி தொடர்பில் கடந்த காலத்தில் இருந்த சபாநாயகர்கள் பணியாற்றிய படி, தற்போதைய சபாநாயகரும், நாடாளுமன்றமும் செயற்படும்.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 04(சீ) ஷரத்திற்கு அமைய நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை செயற்படுத்தும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு வழங்கப்படவில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 107 வது பிரிவுக்கு அமைய நீதிபதிகளை நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்குரிய அதிகாரம் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் எதிர்காலத்தில் சபாநாயகரின் முடிவுக்கு தலைவணங்கி அதனை செயற்படுத்துவோம் எனவும் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக