புதன், 2 ஜனவரி, 2013

குற்றப்பிரேரணை விவகாரம் குறித்த ஐ.நாவின் குற்றச்சாட்டுக்கு பதில் வழங்க இலங்கை தயார்!

News Serviceஇலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான அரசியல் குற்றப் பிரேரணை குறித்து ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள கருத்துக்கு, தமது பதிலை அனுப்புவதற்கு இலங்கை அரசு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சின் சார்பாக பேசவல்ல சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இது குறித்து ஊடகங்களுக்கு விபரிக்கையில், எதிர்வரும் சில தினங்களில் தமது விளக்கத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பவுள்ளதாக கூறினார். ஐக்கிய நாடுகளின் சுயாதீன நீதியரசர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் விசேட பேச்சாளர் கேப்ரியலா க்னவுல் அண்மையில், பிரதம நீதியரசருக்கு எதிரான அரசியல் குற்றப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். குற்றப் பிரேரணை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அவதானத்துடன் செயற்படுவதாக அவர் வலியுறுத்தி கூறியிருந்தார். எனவே, குற்றப் பிரேரணையை மீள ஆராயுமாறு தாம் கோருவதாக விசேட பேச்சாளர் கேப்ரியலா க்னவுல் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றப் பிரேரணை தெரிவுக்குழு அறிக்கை அரசியல் மயப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசருக்கு எதிரான அரசியல் குற்றப் பிரேரணை தொடர்பில் முழுமையான விடயங்களை ஆராயாமல் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பேச்சாளர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக