புதன், 2 ஜனவரி, 2013

அரசு திருந்திக்கொள்வதற்கு இந்த வருடம் தான் கடைசி சந்தர்ப்பம் - மனோ கணேசன்

கேட்பதை கொடுக்காமல், கேட்காததை கொடுக்கும் இந்த அரசு ஒரு புதுமையான அரசாங்கம். தம்மை திருத்திகொள்வதற்கு இந்த அரசாங்கத்துக்கு இந்த வருடம்தான் கடைசி சந்தர்ப்பம் ஆகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பிரித்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்' என்ற தொனிப்பொருளில் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, நமது இந்த மேடை தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக பேசப்பட நாம் உருவாக்கியுள்ள மேடை ஆகும். நாட்டின் ஏனைய பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு இந்நாட்டில் எத்தனையோ கட்சிகளின் மேடைகள் உள்ளன. பலதும் இங்கே பேசினாலும், அரசியல் அதிகாரத்தை பிரிப்போம், நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற செய்தியை சிங்கள மக்களுக்கு சொல்வதற்கே பிரதானமாக நாம் இந்த மேடையை பயன்படுத்துகின்றோம்.
தென்னிலங்கையில் இன்று பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த அரசாங்கத்தின் மகிந்த சிந்தனையை அனுசரிக்கவேண்டும். வேறு அரசியல் சிந்தனைகளை கருத்தில் கொள்ள கூடாது. பல்கலைக்கழக மாணவர்கள் தமது மூளைகளை பூட்டி வைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த தலைமைத்துவ பயிற்சி நடத்தப்படுகிறது.வடக்கில் புனர்வாழ்வு என்பது பெரும்பான்மை இன ஆதிக்கத்தை தமிழ் இளைஞர்கள் எதிர்ப்பில்லாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது. தமிழர்கள், இந்த நாட்டிலே அதிகாரத்தை கோரக்கூடாது. இந்த நாடு சிங்கள இனத்துக்கு மாத்திரம் சொந்தமான நாடு என்ற சிந்தனையை தமிழ் இளைஞர்கள் தலையில் புகுத்துவதற்காக இந்த புனர்வாழ்வு பயிற்சி நடத்தப்படுகிறது.யாழ் மாணவர்கள் தாமாக விரும்பி புனர்வாழ்வை கேட்டார்கள் என இவர்கள் சொல்கிறார்கள். ஆகவே அவர்கள் கேட்டதை இவர்கள் கொடுத்தார்களாம். ஆகா,கேட்டதை எல்லாம் கொடுக்கும் எவ்வளவு நல்ல ஒரு அப்பாவி அரசாங்கத்தை ஆண்டவன் நமக்கு தந்துள்ளான் என்பதை பாருங்கள்.
ஆனால் கேட்பதை எல்லாம் கொடுக்கும் அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுள்ள ஜனநாயக பிரதிநிதிகளான நாம் கேட்பது காதில் விழவில்லை. நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாகாணசபையை முதலில் வழங்குங்கள் என்றும், நாட்டின் அரசியல் சட்டத்தில் இன்று உள்ள 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யுங்கள் என்றும் நாம் கேட்பது இவர்கள் காதில் விழவில்லை. பயங்கரவாதத்திற்எதிரான யுத்தம் முடிந்தவுடன் இன்று பொருளாதார யுத்தம் நடத்தப்படுவதாக அரசு சொல்கிறது. வடக்கில் இதன்மூலம் பொருளாதார அபிவிருத்தி நடைபெறுவதாக சொல்கிறது. யுத்தத்தால், உடைந்து நாசமாகியுள்ள பாதைகளையும், கட்டிடங்கள் சிலவற்றையும் நிர்மாணிப்பது எப்படி பொருளாதார அபிவிருத்தியாகும்? உடைந்தவைகளை செய்வது அபிவிருத்தி அல்ல. அது திருத்த வேலையாகும். இதுவும் இன்று ஒழுங்காக நடைபெறவில்லை.உண்மையில் தமிழ் மக்கள் கோருவது கொழும்பிலிருந்து எடுக்கப்படும் முடிவுகளை அல்ல. இங்கேயிருந்து முடிவெடுத்து சென்று வடக்கில் அமுல் செய்ய நினைக்காதீர்கள். திருத்த வேலைகளைகூட இதன்மூலம் ஒழுங்காக செய்ய முடியாது. பாலம் கட்டவும், வீதி அமைக்கவும், அவற்றை எங்கே, எப்படி, எவ்வாறு என்ற முடிவுகளை எடுக்கும் அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படையுங்கள். இதுதான் உண்மையான அரசியல் அதிகார பகிர்வு. இதன்மூலம்தான் உண்மையான பொருளாதார அபிவிருத்தி ஏற்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக