முள்ளிவாய்க்காலுக்குப் பின் 2 முறை திருப்பதிக்கு சென்று திரும்பிய ராஜபக்ஸ, தற்போது 3வது முறையாக வருகிற 8ம் திகதி செல்லவுள்ளார். அவருக்கு இந்தமுறை மிகத் தீவிரமான எதிர்ப்பைக் காட்டப் போவதாக தமிழ் அமைப்புகள் எச்சரித்துள்ளதால், திருப்பதி செல்லும் ராஜபக்சவுக்காக பலத்த பாதுகாப்புக்கு ஆந்திர அரசும், மத்திய அரசும் ஏற்பாடு செய்துள்ளனவாம். முதலில் கொழும்பில் இருந்து தனி விமானம் மூலம் பீகார் செல்கிறார் ராஜபக்ச. பின்னர் புத்தகயா செல்லும் அவர் அங்கு வழிபாடு நடத்துகிறார். பின்னர் அதே விமானத்தில் ஏறி ரேணிகுண்டா செல்கிறார். அங்கிருந்து காரில் திருமலைக்குப் புறப்படுகிறார். திருப்பதி போய் சாமி தரிசனம் செய்து விட்டு இலங்கை திரும்புகிறார். தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ச இந்தியாவுக்கு மீண்டும் மீணடும் விஜயம் செய்வதற்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல்வேறு போராட்டங்களையும் அறிவித்துள்ளன. டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிடப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில் திருப்பதி செல்லும் ராஜபக்சசவுக்கு அங்கு கடும் எதிர்ப்பைக் காட்ட தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதால் ராஜபக்சவுக்கு ஆந்திர அரசும், மத்திய அரசும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளன. இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளும் இதற்காக திருப்பதி சென்றுள்ளனர். திருமலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஸ்ரீனிவாசராவ், போலீஸ் சூப்பிரண்டு சுப்புராமரெட்டி ஆகியோருடன் இலங்கை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருப்பதி கோவில் வரை பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்த ஆந்திர பொலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக வேலூர், திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் தமிழக பொலீசார் குவிக்கப்படுகின்றனர். அதேபோல திருப்பதி கோவிலிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கோவிலிலும் பதட்டமான சூழலே காணப்படுகிறது.ராஜபட்ச வருகைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி
இலங்கை ஜனாதிபதி ராஜபட்சவின் திருப்பதி தரிசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பெப்ரவரி 8-ம் திகதி டெசோ அமைப்பினர் கறுப்பு உடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற டெசோ அமைப்பினரின் கலந்துரையாடல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் ரவிக்குமார், வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சிங்களப் பேரினவாதத்தின் சின்னமாக உலவி வருபவர் ராஜபட்ச. இந்தியாவுக்கு அவர் வருவதை மத்திய அரசு ஊக்குவிக்கக்கூடாது. ராஜபட்ச இந்தியா வருவதை தமிழர்கள் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே ராஜபட்ச வருகையைக் கண்டித்து பிப்ரவரி 8-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னையில் கருப்பு உடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தில்லியில் டெசோ கருத்தரங்கம்: இலங்கையில் ஈழத் தமிழர்கள் படும் துன்பங்களை விளக்கும் வகையில் தில்லியில் வரும் மார்ச் மாதம் டெசோ இயக்கத்தின் சார்பில் அனைத்ந்திய அளவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து கருத்தரங்கம் நடத்தப்படும்.
ஐ.நா.வில் தீர்மானம்: அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைய கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா புதிய தீர்மானம் கொண்டு வர உள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மூர் கூறியுள்ளார்.
அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதுடன் மட்டுமல்லாமல், உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, ஈழத் தமிழர்களுக்கு விரைவில் வாழ்வுரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்வதேசக் குழு: ஐ.நா.வின் மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேச குழு ஒன்று அமைக்கப்பட்டு இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று டெசோ மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு உலகத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே இந்தத் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
பொதுவாக்கெடுப்பு: ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பொதுவாக்கெடுப்பு தொடர்பான தீர்மானம் ஒன்றினை முன்னெடுத்துச் சென்று அதனை நிறைவேற்றுவதற்கான உறுதியான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
தமிழர்கள் காணவில்லை: இலங்கையில் போர் முடிந்தவுடன் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். பேபி சுப்பிரமணியன், பாலகுமார், யோகி, ரத்தினதுரை, இளம்பரிதி, எழிலன், பூவண்ணன் போன்ற முன்னணி தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அனைவரும் இப்போது உயிருடன் உள்ளனரா எனச் சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பான உண்மை நிலையினை இலங்கை அரசு உலகுக்கு வெளியிட, இந்திய அரசும், உலக சமுதாயமும் அழுத்தம் தர வேண்டும் என்பன உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பிரதமர் வீடு முற்றுகைப் போராட்டம்: மதிமுகவினர் நாளை டெல்லி பயணம்
ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து பிப்ரவரி 8 ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் வீட்டினை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக மதிமுகவின் சீருடை அணிந்த தொண்டர் அணித் தோழர்கள் 100 பேர், ஆ.பாஸ்கரசேதுபதி தலைமையில், நாளை (05.02.2013 செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் எழும்பூரிலிருந்து புறப்படும் சம்பர் கிராந்தி எக்ஸ்பிரஸ் இரயிலில் டெல்லி பயணிக்கின்றனர். இந்த தொண்டர்களை பொதுச்செயலாளர் வைகோ , பழ.நெடுமாறன் ,கொளத்தூர் மணி ஆகியோர் எழும்பூர் இரயில் நிலையம் வந்து உற்சாகப்படுத்தி வழி அனுப்பி வைக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் வைகோ முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக