இந்த மாத இறுதியில் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. வின் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது ஆதரவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய யூனியனின் இந்த முடிவை இராஜதந்திர வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன. ஐரோப்பிய யூனியனின் இந்த முடிவால் இலங்கை அரச தரப்பு மத்தியில் பெரும் அதிர்வலைகள் கிளம்பத் தொடங்கியுள்ளன. ஐ.நா.வின் மனித உரிமைகள் சபையின் 22 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகி 4 கட்டங்களாக மார்ச் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரின் போது அமெரிக்காவினால், இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை வழங்கியிருந்தது. எனினும் அந்த சந்தர்ப்பத்தை இலங்கை உரிய முறையில் பயன்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளது அமெரிக்கா. இந்தநிலையில் அமெரிக்கா தற்போது கொண்டுவரவுள்ள பிரேரணை இலங்கை மீது கடும் அழுத்தத்தைப் பிரயோகிக்கும் வகையில் அமையவுள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பாக கடந்த 11 ஆம் திகதி ஐ.நா பொதுச்சபைக்கு அனுப்பிய விடயங்களை உள்ளடக்கியதாகவே புதிய பிரேரணை அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணைக்கான முழுமையான ஆதரவை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கத் தீர்மானித்துள்ளது. கடந்தமுறை அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 9 மேலதிக வாக்குகளால் ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 27 நாடுகளில் 9 நாடுகள் இந்தமுறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் தகுதியைக் கொண்டுள்ளன. ஒஸ்திரியா, செக்குடியரசு, ஈஸ்ரோனியா, ஜேர்மனி, அயர்லாந்து, இத்தாலி, போலண்ட், ருமேனியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளே மனித உரிமைகள் சபையில் வாக்களிக்கும் தகுதியுடைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாகும்.இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பிய பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் பேர்ட், அமெரிக்காவின் புதிய பிரேரணையை பிரிட்டனும் ஆதரிக்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஐ.நா மனித உரிமைகள் சபையில் பிரிட்டன் வாக்குரிமையை இழந்திருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் முடிவெடுக்கும் அதிகாரம்மிக்க நாடுகளில் ஒன்றாகவே அது காணப்படுகின்றது. இதனடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளில் 20இக்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டன என்று நம்பகரமாகத் தெரியவருகின்றது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு அமைய ஐ.நா மனித உரிமைகள் சபையில் வாக்களிக்கும் தகுதியுடைய 9 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க தீர்மானித்துள்ளன. எனினும் இந்தத் தீர்மானத்தைக் கடைசித் தருணம் வரை இரகசியமாக வைத்திருக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட பிரேரணையை எதிர்த்து வாக்களித்து இலங்கைக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்த சீனா, ரஷ்யா, பங்களாதேஷ், கியூயா, ஜோர்தான், சவூதி அரேபியா போன்ற நாடுகள் இந்த முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளன. இதனால் அமெரிக்காவால் இந்த ஆண்டு கொண்டுவரப்படும் இலங்கைக்கு எதிரான காட்டமான பிரேரணை நிச்சயமாக நிறைவேறும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக