செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

நூற்றுக்கணக்கான தமிழ்த் திரை நட்சத்திரங்களுடன் பனி விழும் மலர் வனத்தில் வந்திறங்கினார் இளையராஜா!

75க்கும் மேற்பட்ட தமிழ்த் திரை நட்சத்திரங்களும், பிரபல பாடகர்களும் புடை சூழ இன்று ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார் இசைஞானி இளையராஜா. பனி விழும் அழகான வேளையில் தமிழ் திரையுலகப் பிரபலங்கள் பெரும்பாலானோர் விமானங்களில் வந்திறங்கிய காட்சி பனி விழும் மலர்வனத்தில் நட்சத்திரங்கள் மின்னுவது போன்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தியது. இசைஞானி இளையராஜா குழுவினரின் " எங்கேயும் எப்போதும் " ராஜா பிரமாண்ட இசைநிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி ரொறொன்ரோவில் உள்ள ரோஜர்ஸ் சென்ரரில் நிகழ உள்ளது. இதற்காக வந்திறங்கிய திரைநட்சத்திரங்கள் அனைவரையும் ட்ரினிட்டி இவன்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர்களான Dunstan, கிசான் ஆகியோரோடு இணைந்து கனடாவில் உள்ள அனைத்து தமிழ் ஊடகங்களும் வரவேற்றார்கள். கடந்த முறை போல் அல்லாது இந்த முறை இசைஞானி மிகுந்த சுறுசுறுப்புடன் , புன்முருவலுடனும் காணப்பட்டார். ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த இளையராஜா , கனடாவில் வந்திறங்கும் போது தன்னுடைய பிரபல பாடல்களில் ஒன்றான பனிவிழும் மலர் வனமே நினைவுக்கு வருவதாகக் கூறியதோடு , பனி விழும் மலர் வனம் நிகழ்ச்சிக்கு உங்கள் வரவே எங்களுக்கு வரம் எனவும் கூறி அசத்தினார். கன்னத்தில் முததமிட்டால் படத்தில் குழந்தையாக தன் அற்புதமான நடிப்பின் மூலம் நம் மனங்களைக் கொள்ளை கொண்ட பார்த்திபன் மகள் கீர்த்தனா.....யப்பா அந்தக் குழந்தையா இது என நம்ப முடியாத அளவிற்கு வளர்ந்து பெரிதாகி அசத்தலான அழகுடன் தேவதை போன்று வந்திறங்கியது வரவேற்க வந்திருந்தோர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டது என்று தான் கூற வேண்டும் தமிழ் திரைப்படங்களில் தனக்கே உரித்த தனிப்பாணியில் எப்போதும் , எதிலும் வித்தியாசமாக இயங்கி வரும் பார்த்திபன் வரவேற்க வந்திருந்த ஊடகவியலாளர்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினார். இராமாயணத்தில் ராமனுக்கு அணில் உதவியதைப் போலவே இந்த பிரமாண்ட விழாவில் தனது பங்களிப்பும் எனக் கூறினார் பார்த்திபன்.

தமிழ் திரையுலகமே திரண்டு வந்துள்ள இந்த மாபெரும் பிரமாண்ட " எங்கேயும் எப்போதும் " ராஜா இன்னிசை விருந்திற்கு மக்கள் கூட்டம் அலை மோதுவதோடு மட்டுமல்லாமல் இந்த வருடத்தின் மிகப் பெரிய இன்னிசை நிகழ்வாகவும் இது அமையும் என்பதில் எந்த ஐயமுமில்லை..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக