ஐநா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு தந்த உறுதிமொழிகளின்படி கற்றுக்கொண்ட ஆணைக்குழு செய்துள்ள சிபாரிசுகளை முறையாக நிறைவேற்றி வருகிறோம் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உலகத்துக்கு சொல்லி வருகிறார். இப்போதும் இதற்காகவே இங்கிலாந்துக்கு ஓடோடி போயுள்ளார். இந்நிலையில் தான், யாழ் தினக்குரல் பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது புத்தூர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மூலம் யாழ்ப்பாணத்தில் இன்று ஆயுதக்குழு செயற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு செய்துள்ள மிக முக்கியமான ஒரு சிபாரிசு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. அதேபோல் ஊடகதுறையாளரின் பாதுகாப்பு தொடர்பிலும் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு செய்துள்ள முக்கியமான ஒரு சிபாரிசு மீண்டும் ஒருமுறை மீறப்பட்டுள்ளது
மார்ச் மாதம் நடக்க இருக்கும் ஐநா மனித உரிமை குழு கூட்டத்தில் வாக்களிக்க இருக்கும் நாடுகளின் கொழும்பு தூதுவர்கள் இந்த உண்மை நிலவரத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். தமிழ் ஊடகதுறையை சார்ந்தவர்கள் தாக்கப்படுவதை நாம் இனியும் வேடிக்கை பார்க்க முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
சட்ட விரோத ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு அவை கலைக்கப்பட வேண்டும் எனவும். ஊடகதுறையினரின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் உறுதி செய்யப்படவேண்டும் எனவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கூறுகிறது.
இந்த ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை நிறைவேற்றுவோம் என சொல்லித்தான் கடந்த வருடம் இந்த அரசாங்கம் கொஞ்சமாவது தப்பி பிழைத்தது. இந்நிலையில் இன்று இந்த உறுதிமொழிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இதை உலகம் பதிவு செய்து கொள்கிறது.
நமது மக்கள் கண்காணிப்பு குழு உட்பட மனித உரிமை மற்றும் ஊடக அமைப்புகள் இந்த உரிமை மீறல்களை பதிவு செய்து உலகத்துக்கு அறிவித்துள்ளன. உரிமைகளை நீங்கள் அப்பட்டமாக மீறிவிட்டு, உலகத்துக்கு புகார் சொல்கிறோம் என எம்மை குற்றம் சாட்ட வேண்டாம் என அரச தரப்புக்கு சொல்கிறேன்.
யாழ்ப்பாணம் இன்று முழுக்க, முழுக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இராணுவத்தை மீறி அங்கே போலிஸ் துறை கூட செயல்பட முடியாது. எனவே இந்தவிதமான தாக்குதல் சம்பவங்கள் இராணுவத்துக்கு தெரியாமல் நடக்க முடியாது. இராணுவம் இதை நேரடியாக செய்யாவிட்டால், சட்டவிரோத ஆயுதக்குழுக்கள்தான் இதை செய்திருக்க வேண்டும்.
இந்த ஆயுதக்குழுக்களுக்கும், இராணுவத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? சட்ட விரோத ஆயுதக்குழுக்கள் இன்னும் யாழ்ப்பாணத்தில் ஏன் இருக்கின்றன? ஊடகங்கள் யாழில் சுதந்திரமாக எழுதி, அச்சடித்து, விநியோகிக்கப்பட முடியாதா? இந்த கேள்விகளுக்கு விடைகளை அரசாங்கம் உலகத்துக்கு சொல்லவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக