வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ஆகியோருக்கெதிராக முன்னணி கட்டட ஒப்பந்தகாரர் ஒருவர் உயர்நீதிமன்றினில் வழக்கொன்றினை தாக்கல் செய்துள்ளார்.
திட்டமிட்ட நிதி துஸ்பிரயோகம் தொடர்பில் இவர்களுக்கெதிரான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வவுனியாவை சேர்ந்த முன்னணி கட்டட ஒப்பந்தகாரரான வி.வி.இராமநாதன் என்பவரே இவ்வழக்கினை தாக்கல் செய்துள்ளார். முறையற்ற விதத்தில் அரசினால் கட்டுமானப் பணிகளுக்கென கேள்விகள் கோரப்பட்ட வேளை தம்மை அதில் பங்கெடுக்கவிடாது தடுத்தமை; தொடர்பிலும் தமக்கு ஏற்பட்ட இழப்பை கருத்தில் கொண்டும் இவ்வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
ஏற்கனவே உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவை வழங்கும் நிதிகள் உரிய வகையில் செலவு செய்யப்படாது திரும்பிச் செல்லலாமென அஞ்சப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது ஆளுநரும் அமைச்சர்களான டக்ளஸ் மற்றும் றிசாத் ஆகியோரது தலையீடு காரணமாகவும் பெருமளவு நிதி திரும்பி செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகளால் ஒதுக்கப்படும் நிதி ஆளுநரால் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக அவர்களது தலைமை காரியாலயங்களுக்கு வி.வி.இராமநாதன் கட்டட ஒப்பந்தகாரர் நிறுவனம் புகார்களை செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வடக்கில் கட்டட வேலைகளுக்கான ஒப்பந்தகாரர்களாக தென்னிலங்கையினை சேர்ந்தவர்களையே களமிறக்க ஆளுநர் சந்திரசிறி முற்படுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட ஒப்பந்த நிறுவனமான ஈரோவில் நிறுவனத்தை மீண்டும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி களமிறக்கிய விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினது பெயர் அடிபடும் நிலையில் இப்போது ஆளுநர் நீதிமன்று படியேற தயாராகிவருகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக