புதன், 27 பிப்ரவரி, 2013

இந்தியாவுடன் இணக்கப்பாட்டினை எட்ட டில்லி செல்கிறது மஹிந்த அணி

ஜெனிவாவில் ஏற்படவுள்ள அழுத்தங்களில் இருந்து இலங்கையைக் காப்பாற்றக் கூடிய நிலையில் இந்தியாவே இருப்பதால், அதனுடன் பேசி, ஓர் இணக்கப் போக்கை ஏற்படுத்த இலங்கை அரசு முயற்சிப்பதாகக் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
.
இலங்கையின் நிலைப்பாட்டைப் புதுடில்லிக்கு விளங்கப்படுத்தி, அதன் ஆதரவைத் திரட்டுவதற்காக விரைவில், இலங்கை அரசின் உயர்மட்டக் குழு அல்லது பிரதிநிதி இந்தியா செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
.
அண்மையில் புதுடில்லி சென்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால், புதுடில்லியை வளைத்துப் போடு முடியாததால், மீண்டும் அவர் அங்கு அனுப்பப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிகிறது.
.
ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க அல்லது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அல்லது இவர்களை உள்ளடக்கிய குழுவொன்றே புதுடில்லிக்கு அனுப்பப்படலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
.
இது தொடர்பாக, புதுடில்லியின் சாதகமான சமிக்ஞைக்காகக் கொழும்பு காத்திருப்பதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
.
அதேவேளை, இலங்கையின் இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னதாக, இந்தியாவுடன் பேச்சு நடத்தப்படும் என்று இலங்கை நம்புவதாக, ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
.
போருக்குப் பின்னர் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவிடம் இலங்கை எடுத்துக் கூறும்.நாம் இந்தியாவிடம் முறையிடப் போவதில்லை.
.
ஆனால், புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, உட்கட்டுமான மீளமைப்புகளில் நாம் எட்டியுள்ள சாதனைகள் குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறுவோம் என்று அவர் கூறியுள்ளம குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக