மீண்டும் ஒரு முறை ஜனநாயகத்தின் குரல் வளையை வன்முறை மூலம் நசுக்குவதற்காகவே தினக்குரல் பத்திரிகை தீயிட்டு எரிக்கப்பட்டு அதன் விநியோகப் பணி ஊழியரும் தாக்கிக் காயப்படுத்தப்பட்டுள்ளார். நாட்டில் ஜனநாயகச் சூழலும் ஊடக சுதந்திரமும் நிலைக்கக்கூடாது என்று விரும்பும் சக்திகளே இந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ளன. படையினரின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள குடாநாட்டில் தொடர்ந்தும் ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்படும் இத்தகைய அடாவடிகளுக்கு மாவட்ட கட்டளைத் தளபதி என்ற வகையில் ஹத்துரு சிங்கவே பொறுப்புக் கூற வேண்டும். மக்களின் உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் குறிப்பாக பல்கலைக்கழகச் சூழலில் தேவையற்ற வகையில் படைப் பிரசன்னத்தையும் பாதுகாப்பையும் அதிகப்படுத்தி அறிக்கைகளை வெளியிட்டு நெருக்கடியான சூழலை ஏற்படுத்தும் ஹத்துரு சிங்க ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறை சார் சம்பவங்கள் குறித்து மௌனித்திருப்பது சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றது. கடந்த மாதம் ஜனவரி 10 ஆம் திகதி வடமராட்சியில் வைத்து உதயன் விநியோகப் பிரிவு ஊழியர் முட்கம்பி சுற்றப்பட்ட பொல்லுகளால் அடித்து படுகாயப்படுத்தப்பட்டார். அவரது மோட்டார் சைக்கிளுடன் உதயன் பிரதிகளும் நடு வீதியில் வைத்து எரியூட்டப்பட்டன. ஆனால் அது குறித்து எவரும் கைது செய்யப்படவில்லை. விசாரணைகளிலும் எதுவித முன்னேற்றமும் இல்லை. இப்போது மீண்டும் அதே பாணியில் தினக்குரல் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் தாக்கப்பட்டு அவரது மோட்டார் சைக்கிளும் பத்திரிகைப் பிரதிகளும் கொளுத்தப்பட்டுள்ளன. இந்த இரு சம்பவங்களிலும் ஒரே கும்பலே சம்பந்தப்பட்டுள்ளது. வன்முறை நிகழ்ந்த விதம் முட்கம்பி சுற்றப்பட்ட பொல்லுகளாலான ஆயுதம் சம்பவத்தின் நோக்கம் என்பன இதையே தெளிவு படுத்துகின்றன. தற்போது யாழ்ப்பாணத்தில் அடக்கு முறைகளுக்கு மத்தியிலும் உண்மையின் குரலாக ஒலிக்கும் உதயன் தினக்குரல் வலம்புரி போன்ற ஊடகங்களின் குரலை இல்லாமல் செய்யும் ஒரு நிகழ்ச்சி நிரலில் அரசும் அரசுக்கு குடை பிடிக்கும் அடாவடிக்கும்பலும் திட்டமிட்டு செயற்படத் தொடங்கியுள்ளன. அதிகார ஊதுகுழல் ஊடகங்களை மக்கள் புறக்கணித்த நிலையில் மக்கள் சார் ஊடகங்களை ஒடுக்குவதன் மூலமே தமது கருத்துகளை மக்களிடம் திணிக்கலாம் என அதிகாரம் சார்ந்தவர்களும்�� அவர்களின் அடி வருடிகளும் எண்ணுகின்றனர். வடமாகாணத் தேர்தலுக்கு முன்பாக தமது கருத்துகளை மக்களிடம் திணித்து அதன் மூலம்வாக்குகளைத் தம் பக்கம் திருப்பும் மூன்றாம்தர செயற்பாடுகளிலேயே இந்தத் தரப்பினர் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஜனநாயக ரீதியில் ஊடகங்களையும் அவற்றின் கருத்துக்களையும் எதிர்கொள்ள திராணியற்ற இவர்கள் புறமுதுகில் குத்துவதைப்போன்று தமது கொலைக் கருவிகளின் உதவியோடு வன்முறை வழிகளை தடம் பதிக்கத் தொடங்கியுள்ளனர். பத்திரிகைகளின் விநியோகப் பிரிவினரைத் தாக்குவதன் மூலம் ஊடக துறையினரின் மனோதிடத்தை சிதைப்பதே தாக்குதலாளிகளின் நோக்கமாக இருந்துள்ளது. இது ஒரு திட்டமிட்ட உளவியல் போர். இத்தகைய உளவியல் போர் ஊடகங்கள் மீது பிரயோகிக்கப்படுவது இது முதல் முறையல்ல .இதற்கு முன்னரும் பல தடவைகள் வௌ;வேறு வழிளுகடாக மேற்கொள்ளப்பட்ட இந்த உளவியல் போரை உண்மையின் துணை கொண்டு ஊடகங்கள் எதிர்கொண்டன.
இத்தகைய நெருக்குவாரங்களின் மத்தியிலும் தினக்குரல் பத்திரிகை தனது கொள்கையில் இருந்து விடுபடாது ஜனநாயகத்தினதும் மக்களினதும் உண்மையினதும் குரலாக ஒலித்து வந்தது. எனவே அந்த ஊடகத்தை இது போன்ற வன்முறைகள் ஒரு போதும் சிதைத்துவிட முடியாது. விழவிழ விதைகளாக எழுவதுபோல இதுபோன்ற வன்முறைகள் தினக்குரல் பணியாளர்களை இன்னமும் மனோதிடம்மிக்கவர்களாக மாற்றி அவர்களின் உண்மையின் குரல் இன்னமும் உரத்த தொனியில் ஒலிக்கும் என நம்பலாம்.
உலக அரங்கில் ஊடக சுதந்திரத்தில் 165 ஆவது இடத்துக்கு கடந்த வருடம் இலங்கை தள்ளப்பட்டிருந்தது. இன்னமும் விடாது தொடருகின்ற ஊடகங்கள் மீதான வன்முறைகளால் ஊடக சுதந்திரத்தின் நிலை மேலும் மோசமாகி விடும். அத்துடன் நாட்டின் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் இது போன்ற வன்முறைகள் பெரும் தடைக் கற்களாக மாறிவிடும் பேரபாயம் உண்டு.
ஊடகங்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறில்லாமல் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் ஜனநாயகக் குரலோடு வெளிவரும் ஊடங்கள் மீது வன்முறைப் பாய்ச்சல் நிகழுமாயின் அதற்கு அரசும் அரசின் பிரதிநிதியான வடமாகாண ஆளுநரும் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியுமே மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் பொறுப்புக் கூறவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக