இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2 நாள் சுற்றுப் பயணமாக நாளை (08) (வெள்ளிக்கிழமை) காலை டெல்லி செல்கிறார்.
கொழும்பில் இருந்து விமானத்தில் செல்லும் அவர், பீகார் மாநிலம் புத்தகயா செல்கிறார். புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் வழிபாடு நடத்துகிறார். இரவு 7 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் சென்று அங்கிருந்து காரில் திருப்பதி திருமலைக்கு செல்கிறார். இரவு பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை மறுதினம் (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார். பின்னர் ரேணிகுண்டாவுக்கு காரில் செல்கிறார். அங்கு இருந்த விமானம் மூலம் கொழும்பு திரும்புகிறார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் நடத்திய போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் ராஜபக்ஷவின் வருகைக்கு ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் தமிழர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
ராஜபக்ஷ நாளை இரவு திருப்பதி வரும்போதும், நாளை மறுநாள் சாமி தரிசனம் செய்யும்போதும் 2 நாட்கள் திருப்பதியில் ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் முற்றுகை போராட்டம் நடத்துகிறது. திருப்பதியில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமையில் தொண்டர்கள் செல்கிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஆந்திராவை ஓட்டி உள்ள எல்லையோர கிராமங்களில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 1000 பேர் நாளை காலையில் திருப்பதி புறப்பட்டு செல்கிறார்கள்.
ம.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதற்காக சுமார் 2 ஆயிரம் பேர் வேலூர், திருவள்ளூர் மாவட்டம் வழியாக நாளை காலை ஆந்திராவுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையில் எந்தவித பாதுகாப்பும் போடப்படவில்லை. இதையொட்டி திருப்பதி திருமலையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் எல்லைகளில் பொலிஸார் நிறுத்தப்படுகிறார்கள். திருப்பதி மலைப் பாதையில் வாகனங்களை தீவிர வாகன சோதனைக்கு பின்னரே பொலிஸார் அனுமதிக்கின்றனர்.
போராட்டக்காரர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆந்திர பொலிஸார் சட்டம் ஒழங்கு பாதிக்கப்படும் எனக் கருதி தமிழக பொலிஸார் உதவியை நாடினால் எல்லையில் போராட்டத்தில் கலந்து கொள்பவர்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் பொலிஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் தெரிவித்தார்.
இதற்கிடையே ஆந்திராவில் தமிழக எல்லையோர பகுதியில் உள்ள சோதனை சாவடியில் ஆந்திர பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிர வாகன சோதனைக்கு பிறகே ஆந்திரா மாநிலத்துக்கு வாகனங்கள் அனு மதிக்கப்படுகின்றன.
டெல்லியில் பிரதமர் வீட்டு முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக ம.தி.மு.க.வினர் சுமார் 1500 பேர் ரெயில்களில் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்கள். நாளை காலையில் அனைவரும் ஜந்தர்மந்தரில் கூடுகிறார்கள். அங்கிருந்து வைகோ தலைமையில் பிரதமர் வீடு நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு செல்கிறார்கள்.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வைகோ நேற்று இரவே டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழ்நாட்டில் இருந்து எந்தெந்த ரெயில்களில் எவ்வளவு பேர் வருகிறார்கள் என்பது ரகசிய பொலிஸ் மூலம் டெல்லி பொலிஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜந்தர்மந்தர் மைதானத்திலேயே அனைவரையும் கைது செய்ய டெல்லி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக