றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை குறித்து மரணமடைந்த குழந்தையின் தாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கல் நெஞ்சக்காரி சற்றும் மனக்கவலை கொள்ளாது அதனைத் தானும் பார்வையிட வேண்டுமெனக் கூறி சிறைச்சாலைக்கு வந்துள்ளாள். அவளின் முன்பாகவே ரிஸானாவின் உயிர் பிரிந்தது. மூதூர் றிஷானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது. இது தொடர்பில் சாதக பாதக கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. றிஷானாவை மீட்பதில் இலங்கை அரசு போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இறுதிக் கட்டத்தில் காத்திரமான பங்களிப்புக்களை அரசு மேற்கொள்ளவில்லை என்று கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்றைய சூழ் நிலையில், இலங்கையின் முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் நடந்து கொண்ட அசிரத்தையான போக்குகள் குறித்த தகவல்களும் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளன.மரணமடைந்த குழந்தையின் தாயின் மனநிலையில் மாற்றங்களை எற்படுத்த, நன்கு அரபு மொழி தெரிந்த இலங்கை முஸ்லிம் பெண் ஒருவரை சவூதிக்கு அனுப்பி குறித்த தாயுடன் நேரடியான சந்திப்பொன்றை மேற் கொள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் முன்வைக்கப்பட்ட யோசனை அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்,றிஷானாவின் விடுதலைக்காக சவூதி சென்ற இலங்கை முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் அங்கு என்ன செய்தார்கள்? இங்கு வந்து என்ன செய்தார்கள்? என்ற தகவல்கள் தற்போது எமக்கு ஆதாரபூர்வமாக கிடைக்கப் பெற்றுள்ளன.அவற்றை ஒரு விமர்சன பார்வையில் தருகிறோம்.
சவூதி அரேபியா சென்ற குழு என்ன செய்தது ?
2011ம் ஆண்டு நவம்பர் மாதம் சவூதி அரேபியா சென்ற தூதுக் குழுவில் முதிர்ந்த அரசியல்வாதிகள் இருவர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ஒருவருடன் அந்த அரசியல்வாதியின் மகனும் சென்றிருந்தார். இரண்டாவது அரசியல் வாதி ´பப்ளிசிட்டி´ மன்னர். இவர்கள் சவூதி அரேபியா சென்றடைந்தவுடனேயே முதல் கேட்ட கேள்வி, எந்த ஹோட்டல் எமக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதே. அதன்படி சவூதி தலைநகர் ரியாத்திலுள்ள 5 நட்சத்திர ஹோட்டலான அல்கொஸாமியில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் மகனுடன் சென்ற முதிர்ந்த அரசியல்வாதி, மத்திய கிழக்கிற்கு பொறுப்பாக உள்ள ஜனாதிபதி ஒருவரின் உறவினருக்கு சொந்தமான Pஅலடிcஅல் வில்ல (பலேடிக்கல் வில்லா) இல் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்ததன் பேரில் அங்கு தங்கவைக்கப்பட்டனர். இலங்கையின் ´பப்ளிசிட்டி´ மன்னரின் புதல்வி ரியாத் நகரில் குடும்ப சகிதம் வசிக்கின்றார். அங்கு சென்ற பப்ளிசிட்டி சில தினங்களை அங்கு கழித்து தனது பேரக் குழந்தைகளுடன் பொழுதைப் போக்கினார்.
இவைகளுக்குப் பிற்பாடே றிஷானா நபீக்கின் விடுதலை தொடர்பாக பேச்சு நடத்த இருவரும் ஆயத்தமாகினர் என்பது வேதனைக்குரிய செய்தி. மரணமடைந்த குழந்தை அல் ஒடைபி வம்சத்தை சேர்ந்தது. இதற்கமைய இந்த வம்சத்தின் தலைவரான ஷேக் பைசாலை சந்தித்தது இந்தத் தூதுக் குழு. றிஷானாவை விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொண்டது. ஆனால் அவர்களிடத்தில் றிஷானாவின் குடும்பத்தை பற்றிய போதிய தகவல்கள் இருக்கவில்லை. தாம் கேள்விப் பட்டதை மட்டுமே பேசினர். இது றிஷானாவை பற்றிய அவர்களின் கடுகடுப்பு போக்கில் ஓரளவாவது மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக அமையவில்லை.
தம்மை சந்திக்க வருபவர்களை நன்கு உபசரிப்பதில் சவூதி அரேபியாவை யாரும் விஞ்சிவிட முடியாது என்பது பலரும் அறிந்த உண்மை. இலங்கையிலிருந்து சென்ற குழுவினரையும் நன்கு உபசரித்தனர். அல் ஒடைபி வம்சத் தலைவரின் உபசரிப்பில் திக்குமுக்காடிப் போன குழுவில் இடம்பெற்றிருந்த பப்ளிசிட்டி மன்னர் அங்கிருந்தவாறே இலங்கையின் தமிழ் அரச ஊடகம் ஒன்றுடன் தொடர்பு கொண்டு, உபசரிப்புக்காக வைக்கப்பட்டிருந்த அறுசுவைகளைக் குறிப்பிட்டு ´இதற்கமைய றிஷானா விடுதலை பெறலாம்´ என ஊகத்தின் அடிப்படையில் கூறி, செய்தியை முன்பக்கமாக பிரசுரிக்குமாறும் கட்டளையிட்டார். (அரச ஊடகங்கள் ஆதாரம்)
இதயசுத்தியோடு செயற்படாத குழு
றிஷானா விடுதலை தொடர்பிலான முயற்சியை இந்தளவுடன் நிறைவு செய்து கொண்ட இலங்கைக் குழு நாடு திரும்பியது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மரணமடைந்த குழந்தையின் தந்தையை சந்திக்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லையாம். ஆனால் இக்குழுவினர் வேண்டுகோள் விடுத்திருந்தால் அவர்களைச் சந்தித்து பேச குழந்தையின் தந்தை விருப்பம் கொண்டிருந்ததாக குழந்தையின் தந்தை பின்னர் அறிவித்திருந்தார். இலங்கைக் குழு நாடு திரும்பிய போதிலும் குழுவில் இடம்பெற்றிருந்த அந்த ´பப்ளிசிட்டி´ மன்னர் ரியாத் நகரிலுள்ள தனது புதல்வியின் வீட்டில் சுமார் ஒருவாரம் வரை தங்கியிருந்து விட்டே நாடு திரும்பினார். இதற்கிடையில் அவர்களால் தெரிவிக்கப்பட்டதாக அரச ஊடகத்தில் வெளியான செய்தி தொடர்பில் இலங்கையிலிருந்த முக்கிய முஸ்லிம் அமைச்சர் ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது ´றிஷானா விரைவில் விடுதலையாவார் என்று கூறாமல் எப்படி இவர்களால் நாடு திரும்ப முடியும்? நான் அறிந்த மட்டில் இவர்கள் சுற்றுலா சென்று வந்துள்ளனர்´ என்றார்.
றிஷானாவின் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அரசியல் பிரமுகரை சில மாதங்களுக்கு முன்னர் தொடர்பு கொண்டு றிஷானா குறித்து வினவியபோது அவர் இவ்வாறு கூறினார். ´சவூதி நபர் ஒருவரை எனக்குத் தெரியும். அவர் மூலமாகவே ரிஸானா குறித்த தகவல்களைப் பெற்று வந்தேன். சில காலமாக அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளது´ என்று பதில் கூறினார். பொறுப்பு மிக்க இந்த முஸ்லிம் பிரமுகரின் பதிலைப் பாருங்கள். மர்ஹும் றிஷானா நபீக்கின் விடுதலை தொடர்பில் இலங்கையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் இதயச்சுத்தியோடு செயற்பட்டிருந்தால் ரிஸானா என்றோ மூதூர் திரும்பியிருப்பாள்.
இதயச்சுத்தியோடு இவர்கள் செயற்படவில்லை என்பதற்கு 2005ம் ஆண்டு றிஷானா சவூதி புறப்படும் போது அவளின் வீடு எப்படியிருந்ததோ அதைவிட பரிதாபகரமாக 7 வருடங்கள் கடந்த பின்பும் அந்த வீடு காணப்படுவது ஒன்றேபோதும். றிஷானாவின் பெயரால் ரியாத் நகரிலுள்ள குடும்பத்திருடன் பொழுதைக் கழித்தவர்களும், சுற்றுலா சென்றவர்களும், அறுசுவை உணவுகளை உண்டவர்களும், அரசியல் நடத்தியவர்களும் இன்று முதல் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி அதற்கு பிராயச்சித்தமாக ரிஸானாவுக்காக இறைவனிடம் பிரார்த்தனைகளில் ஈடுபட்டாலே போதும் வேறு எந்த உதவியையும் அவர்கள் செய்யத் தேவையில்லை என்கின்றனர் சம்பவங்களை நேரில் கண்ணுற்ற அதிகார பலமற்ற முஸ்லிம்கள்.
2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஜனவரி 09ஆம் திகதி வரை மேற்சொன்ன அலட்டிக் கொள்ளாத நிலைமைகளே மூதூர் றிஷானா விடயத்தில் நடந்துள்ளன. சவூதி நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அரபு பிரமுகர்களும், சாதாரண மக்களும் ரிஸானா விடுதலையில் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் ஒரு துளியையேனும் எமது நாட்டின் சகல துறைகளிலும் வளம் பெற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்யவில்லை என்பதை மிக வேதனையுடன் உறுதியாக கூறக்கூடியதாகவுள்ளது.றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவல் கிடைத்த மறுநிமிடமே ´றிஷானா விடுதலை விடயத்தில் ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிக்கு நன்றி´ என்று கூறுமளவுக்கு கல் நெஞ்சம் பிடித்த கொடூரர்கள் ´முஸ்லிம் அரசியல் பிரமுகர்´ என்ற நாமத்தில் உலாவருவதையிட்டு முஸ்லிம்கள் வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் எவரது நன்றியையும் ஜனாதிபதி எதிர்பார்த்திருக்கவில்லை. ரிஸானா விடுதலை தொடர்பில் ஜனாதிபதி இதய சுத்தியோடுதான் செயற்பட்டார். ரிஸானா விடுதலைக்காக சவூதி சென்ற குழுவினர் சுற்றுலா மேற்கொண்டதைக் கேள்வியுற்று ஆத்திரப்பட்ட ஜனாதிபதி ஒரு போதும் இந்தக் குள்ளநரியின் நன்றியை எதிர்பார்த்திருக்க மாட்டார்.றிஷானாவின் விடுதலைக்காக அரும் பணியாற்றியது மட்டுமன்றி உறுதுணையாகவுமிருந்த சவூதியில் பணியாற்றும் கண்டியைச் சேர்ந்த பல்வைத்திய நிபுணர் டாக்டர் கிபாயா இப்திகார் நன்றி கூறப்படவேண்டியவர்களில் முக்கியமானவர். சமூக நோக்குடன் அவர் செயற்பட்ட விதம் இறைவனிடத்தில் அபரிமித நன்மையை அடைந்து கொள்ள வழிவகுக்க வேண்டும்.
இரக்கமில்லா கல் நெஞ்சக்காரி
இவையெல்லாம் ஒரு புறம் இருக்க றிஷானாவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படவிருந்த இறுதித் தருணம் குறித்த சில தகவல்கள் எமக்கு சவூதியில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. கல் நெஞ்சங்களையே உருகவைக்கும் அந்தச் சம்பவம் இது தான். இறுதி நேரத்திற்கு முன்பு றிஷானாவிடம் அவரது இறுதி ஆசை குறித்து வினவப்பட்டது இரண்டு ´ரக் அத்´ தொழ வேண்டும். தன்னிடம் இருந்த சிறு தொகை பணத்தை ஸதகா செய்யும் வகையில் தனது உறவினர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த இரு கோரிக்கைகளும் ஏற்கப்பட்டன. தான் வறுமையில் வாடிய போதிலும் தனது இறுதி வாழ்வை தெரிந்திருந்தும் பிறருக்கு உதவி செய்ய அந்த பெண் முன்வந்த அந்தச் சம்பவம் அங்கு நின்ற பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் இன்னுமொரு கொடூரமும் நடந்துள்ளது. றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது குறித்து மரணமடைந்த குழந்தையின் தாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கல் நெஞ்சக்காரி சற்றும் மனக்கவலை கொள்ளாது அதனை தானும் பார்வையிட வேண்டுமெனக் கூறி சிறைச்சாலைக்கு வந்துள்ளாள்.
அவளின் முன்பாகவே றிஷானாவின் உயிர் பிரிந்தது. இந்த கல் நெஞ்சக்காரி ஓர் ஆசிரியை. பாவம் ரிஸானா...!
றிஷானாவின் இறுதி ஆசை
´இரண்டு ´ரக் அத்´ தொழ வேண்டும். தன்னிடம் இருந்த சிறு தொகை பணத்தை ஸதகா செய்யும் வகையில் தனது உறவினர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக