தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளின் வழியைப் பின்பற்றி செயற்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாட்டைப் பற்றி பொய்யான தகவல்களை புலிகளைப் போன்றே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பல நாடுகளுக்கு விஜயம் செய்து, பொய்யான பிரச்சாரங்களை செய்வதனை வழக்கமாகக் கொண்டிருந்தனர் எனவும், அதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, இந்தியா, ஜெனீவா போன்ற நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விஜயம் செய்து போலிப் பிரச்சாரங்களை செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.யாழ்ப்பாணத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் கிடையாது எனவும், எதிர்காலத்தில் ஏனைய மாவட்டங்களைப் போன்றே யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தின் பிரசன்னம் குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நாட்டில் மீண்டும் வன்முறை வெடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை வெளிநபர்களினால் திணிக்க முடியாது எனவும், உள்நாட்டு ரீதியிலேயே அதனை எட்ட முடியும் எனவும் அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக