புதன், 6 மார்ச், 2013

இலங்கையிலிருந்து சனல் -4க்கு யாரும் ஆதாரங்களை வழங்கவில்லை: கெல்லம் மெக்ரே

News Serviceசனல் - 4 தொலைக்காட்சி தமது 'மோதல் தவிர்ப்பு வலயம் - இலங்கையின் கொலைக்களம்' திரைப்படத்தை தயாரிக்க இலங்கையில் வசிக்கும் யாரும் உதவி செய்யவில்லை என்று சனல் 4 தொலைக்காட்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் கெல்லம் மேக்ரே தெரிவித்துள்ளார். இந்த காணொளிக்கு இலங்கையில் ஆதாரங்கள் வழங்கியவர்களை கைது செய்யப்போவதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி திவயின பத்தரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். இலங்கையில் வசிக்கும் எந்த பொது மகனும் சனல் - 4க்கு ஆதாரங்களை வழங்கவில்லை. அத்துடன் இந்த ஆதாரங்களை திரட்டுவதற்கு சனல் - 4 தொலைக்காட்சி யாருக்கும் நிதி வழங்கவும் இல்லை. இந்த தகவல்கள் கிடைக்கப்பெற்ற விதத்தை கொண்டு அரசாங்கம் அச்சுறுத்தல்களை மேற்கொள்வது முறையற்றது என்று அவர் தெரிவித்துள்ளார். குறித்த காணொளியின் உண்மைத்தன்மையால் உலக நாடுகளின் கண்கள் தற்போது இலங்கையின்மீது கவனம் செலுத்தியுள்ளன. பொதுநலவாய நாடுகளும் இலங்கையில் தமது மாநாட்டை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் ஆராய்கிறது என்றும் மெக்ரே தெரிவித்தார். இதேவேளை, இந்த காணொளி தொடர்பில் கருத்துரைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, "நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மேலும் மேலும் மறைக்க முற்படுவதால், பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை" என்று தெரிவித்திருந்தமையையும் மெக்ரே மேற்கோள்காட்டியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக