வெள்ளி, 1 மார்ச், 2013

சிறீலங்காவின் மானம் துயிலுரியப்பட்டு அம்மணமாக நிறுத்தப்படுவது நிச்சயம்.


அய். நா. மனித உரிமை அவையில் சிறீலங்காவின் மானம் துயிலுரியப்பட்டு அம்மணமாக நிறுத்தப்படுவது நிச்சயம் - நக்கீரன்
[Friday, 2013-03-01 13:05:45]
News Service பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது பாரதியின் கவிதை வரிகள். பாரதியார் படைத்த பாஞ்சாலி சபதம் என்ற காவியத்தில் பாஞ்சாலியை அரசவைக்கு துச்சாதனன் இழுத்து வந்து துகிலுரிந்த கட்டத்தில், என்னை சூது வைத்து இழக்க என் கணவனுக்கு ஏது உரிமை என்று அவள் கேட்கிறாள். அவையில் கூடியிருக்கும் ஆச்சாரியர்கள் எல்லாரும் நீ கேட்கிற நியாயம் எல்லாம் பழங்காலத்தில் இருந்தது. இப்போது இதுதான் நீதி, இதுதான் நியாயம், இதுதான் சட்டம் என்று சொல்லிவிடுகிறார்கள். அந்த இடத்தில்தான் பாரதி இந்த சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். 'பேய் அரசுசெய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்.'
சிறீலங்காவை ஆளுகிற பேய் மகிந்த இராசபக்சா. இதில் எந்த அய்யமும் இல்லை. வி.புலிகளை போரில் வென்ற மிதப்பில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
போரின் போது 'இந்தப் போர் பயங்கரவாதத்துக்கு எதிரான போர். விடுதலைப் புலிகளது கையில் சிக்கியுள்ள தமிழ் மக்களை விடுவிக்கவே நாம் இந்த மனிதாபிமானப் போரை நடத்துகிறோம். விடுதலைப் புலிகளுக்கு இராணுவத் தீர்வு, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு' என மகிந்த இராசபக்சே மார் தட்டினார். அரசு எல்லா மக்களது மனித உரிமைகளையும் பாதுகாப்பதாகவும் சொல்லிக் கொண்டார். இந்தக் கதையைக் கேட்டு காது புளித்துப் போய்விட்டது. தமிழ் மக்கள் வி. புலிகளிடம் இருந்து தங்களை விடுவிக்குமாறு மகிந்த இராசபக்சேயிடம் எப்போதாவது கேட்டார்களா?
மக்களது மனித உரிமை பாதுகாக்கப்படுகிறது என்று சொல்வது சரியானால் மே 18 இல் இராணுவத்திடம் வண. பிதா பிரான்சிஸ் யோசேப் தலைமையில் 52 மூத்த விடுதலைப் புலித் தலைவர்கள் சரண் அடைந்தார்கள். சரண் அடைந்ததை யோகி, இளந்திரையன் போன்றோரது துணவிமார் பார்த்திருக்கிறார்கள். சரண் அடைந்த பாலகுமாரும் அவரது மகனும் இராணுவ முகாமில் இருக்கும் படம் வெளிவந்துள்ளது. ஆனால் சரண் அடைந்த 52 மூத்த விடுதலைப் புலித் தளபதிகள் என்ன ஆனார்கள்? என்பதற்கு மகிந்த இராசபக்சேயிடம் இருந்து பதிலே இல்லை! இது அப்பட்டமான மனித உரிமை மீறல் இல்லையா? இன்ப் படுகொலை இல்லையா?
இதே போல் இராணுவத்திடம் சரண் அடைந்த அரசியல் பொறுப்பாளர் ப. நடேசன், திருமதி நடேசன், புலித்தேவன், கேணல் இரமேஷ் மற்றும் நூற்றுக் கணக்கான போராளிகள் இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்களது சடலங்கள் புகைப்படங்களாக வந்துள்ளன.
இப்போது சனல் 4 தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொலை செய்யப்பட முன்னரும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பின்னரும் எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் அந்த இளம் பாலகன் இராணுவத்தினரால் இரண்டு மணித்தியால இடைவேளையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டான் என்பதை எந்த அய்யத்துக்கும் அப்பால் தகுந்த சான்றுகளோடு எண்பித்துள்ளன. இந்தப் படுகொலை ஒரு பாரிய போர்க் குற்றமாகும். சிறீலங்கா அரசின் வழக்கமான உப்புச் சப்பற்ற மறுப்பை யாரும் நம்ப மாட்டார்கள்.
போர் நடக்கும் போது கொடுத்த வாக்குறுதிகளை போர் முடிந்த பின்னர் மகிந்த இராசபக்சே காற்றில் பறக்க விட்டுவிட்டார். 13 ஆவது சட்ட திருத்தத்திற்கு மேலாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்ற வாக்குறுதி தேய்ந்து இப்போது "இந்த நாட்டில் இன அடிப்படையில் வெவ்வேறு நிருவாகங்களை வைத்திருப்பது நடைமுறைச் சாத்தியமில்லை" (�it is not practical for this country to have different administrations based on ethnicity") எனச் சொல்லுகிறார். இதனை வைத்துத்தான் திமுக தலைவர் மு. கருணாநிதி இராசபக்சே தனது சுயவடிவத்தைக் காட்டிப் போட்டார் என தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களுக்கு ஒரு காட்டமான கடிதத்தை எழுதியிருந்தார்.
மகிந்த இராசபக்சே இப்படிச் சொல்லியதின் மூலம் படித்த பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணையத்தின் முக்கிய பரிந்துரை ஒன்று குழி தோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. "சனநாயக அமைப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இனச் சிக்கல் மற்றும் பாரதூரமான சிக்கல்கள் போன்றவற்றுக்கு அதிகாரப் பரவலாக்கல் அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் (A political settlement based on devolution must address the ethnic problem as well as other serious problems that threatnen the democratic institutions) என்பதுதான் அந்தப் பரிந்துரையாகும்.
இனச் சிக்கலுக்கு தீர்வு காணப்படாத நிலையில் ஏற்கனவே உள்ள 13 ஆவது சட்ட திருத்தத்தை குழி தோண்டிப் புதைக்கப் போவதாக மகிந்த இராசபக்சே கோடு காட்டிய பின்னர் அமைச்சர் மகிந்த சமரசிங்கி எந்த முகத்தோடு அய்.நா. மனித உரிமை அவையில் எழுந்து நின்று பேசுகிறார்?
படித்த பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணையம் மொத்தம் 180 பரிந்துரைகளை செய்திருந்தது. ஆனால் அவற்றில் சில பரிந்துரைகள் அல்ல என நீக்கப்பட்டு 167 பரிந்துரைகளை மட்டும் நடைமுறைப்படுத்துவது என சிறீலங்கா அரசு அறிவித்தது. அந்த 167 பரிந்துரைகளில் 69 பரிந்துரைகள் (41.3 விழுக்காடு) முற்றாகவும் 51 பரிந்துரைகள் (30.5 விழுக்காடு) பகுதியாகவும் 47 பரிந்துரைகளை (28.1 விழுக்காடு) கைவிடுவதாகவும் முடிவு செய்தது.
ஆனால் சிறீலங்கா அரசு வெறுங்கையோடுதான் இம்முறை ஜெனீவா சென்றிருக்கிறது. அய்.நா. மனித உரிமை அவையின் தீர்மானத்தை அதற்குரிய மரியாதையோடு சிறீலங்கா நடைமுறைப் படுத்த முயற்சிக்கவில்லை. ஏனோ தானோ என்ற மாதிரி சிறீலங்கா நடந்து கொண்டுள்ளது.
சிறீலங்கா அரசு படித்தபாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணையத்தின் எந்வொரு பரிந்துரைகளையும் நிறைவாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதே அமெரிக்கா, பிரித்தானியா, அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளின் எண்ணமாகும். எனவே தான் அமெரிக்கா மேலும் ஒரு தீர்மானத்தை எதிர்வரும் மார்ச்சு 20 ஆம் நாள் அய்.நா.மனித உரிமை அவையின் 22 அமர்வில் முன்மொழிய இருக்கிறது.
கடந்த ஓராண்டு காலமாக இனச் சிக்கலைத் தீர்ப்பதற்கு, மனித உரிமைகளை பாரபட்சமின்றி நடைமுறைப் படுத்துவதற்கு, வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைப்பதற்கு, சிவில் நிருவாகத்தை மீள சிவில் அதிகாரிகளிடம் கையளிப்பதற்கு, ஊடக சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்கு, ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களைவதற்கு, இடம் பெயர்ந்த மக்களை மீள் குடியமர்த்துவதற்கு சிறீலங்கா அரசு ஒரு துரும்பைத்தானும் தூக்கிப் போடவில்லை. மாறாக நிலைமை மேலும் மேலும் மோசமடைந்து வருகிறது. வடக்கில் - கிழக்கில் இராணுவத்தின் பிடி இறுகிக் கொண்டு வருகிறது. வன்னியில் மட்டும் 148 சிறிய இராணுவ தளங்கள் (http://groups.yahoo.com/group/thamilvaddam/pending/Violation?view=1&msg=30118&part=1) உருவாக்கப்பட்டுள்ளன.
இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் ஒருவர் விடாது எல்லோரும் மீள் குடியமர்த்தப்பட்டு விட்டார்கள் என அமைச்சர் சமரசிங்கி அய்.நா. மனித உரிமை அவையில் பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார். உண்மை அதற்கு மாறானது. மொத்தம் 93,000 தமிழ் மக்கள் அவர்களது சொந்த வீடுகளில் மீள் குடியமர்த்தப்படவில்லை. வலிகாமம் வடக்கில் 30,000 மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நலன்புரிச் நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்கிறார்கள். அவர்களுக்குச் சொந்தமான காணிகள், வீடு வாசல்கள் திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது என்றும் அது நாட்டின் பாதுகாப்புக்குத் தேவை என்றும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ தளபதி மகிந்த ஹத்துருசிங்கி ஆணவத்தோடு பேசுகிறார். வலி வடக்குப் போலவே 2006 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த சம்பூரைச் சேர்ந்த 4,000 மக்கள் மீளக் குடியமர்த்தப்படவில்லை. தெருவோரங்களில் குடிசைகளில் வாழ்கிறார்கள். அவர்களுக்குச் சொந்தமான 10,000 ஏக்கர் நிலம் உயர்பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற வாக்குக்கு இணங்க அனைத்துலக சமூகத்தின் மத்தியில் சிறீலங்காவின் சாயம் வெளுக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை காலமும் போட்ட ஒப்பனை கலைந்து அதன் உண்மையான தோற்றம் உலகுக்கு தெரியவந்துள்ளது. ஊழ்வினை உருத்தி வந்து ஊட்டுகிறது.
அய்.நா. மனித உரிமை அவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை பெப்ரவரி 11 இல் வெளியிட்ட அறிக்கையில் "தமிழ்மக்கள் பெரும்பாலாக வாழும் வடக்கில் உள்ள தமிழ் மக்கள் போரில் கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தனிப்பட்ட மற்றும் சமய சடங்குகளைச் செய்வதற்கு இராணுவம் தடை போடுகிறது. அரச படை வீரர்களுக்கு நினைவாலயங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் சிறீலங்கா அரசின் அதிகாரிகளால் நிறுவப்பட்டுள்ள அதே சமயம் வி.புலிகளது மாவீரர் துயிலும் இல்லங்கள் உடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நினைவாலயங்கள் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ளன. இந்த வெற்றிச் சின்னங்கள் அரசு தங்களை அந்நியப்படுத்துகிறது என்ற உணர்வை (தமிழ்) மக்களுக்கு அளிக்கிறது. குறைந்தது 20,400 கல்லறைகளைக் கொண்ட 25 வி.புலிகளது மாவீரர் துயிலும் இல்லங்கள் வடக்கை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள சிறீலங்கா இராணுவத்தினால் அழிக்கப்பட்டுள்ளன" குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் "சிறீலங்காவில் ஆட்கடத்தல் மற்றும் கொலைகள்" தொடர்வதாகவும் "போர்க் காலத்தில் நடந்த குற்றங்கள் பற்றிய விசாரணையில் முன்னேற்றம் இல்லை" எனவும் நவநீதம் பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார்.
சிறீலங்காவில் நடைபெற இருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என கனடிய பிரதமர் ஹார்ப்பர் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சனநாயகத்தை நிலைநாட்டுமாறு அனைத்துலக நாடுகள் வலியுறுத்திவரும் நிலையில், சனநாயகத்தில் கொழும்பு பின்நோக்கிச் செல்கிறது என அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய உறவுகளுக்கான உதவி இராசாங்கச் செயலர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை காப்பகம் "உங்களுக்கு ஒரு பாடம் படிப்பிப்போம்" தமிழ்மக்களுக்கு எதிரான சிறீலங்கா பாதுகாப்பு படைகளின் பாலியல் வன்முறை என்ற தலைப்பில் 140 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களை நேரடியாக நேர்காணல் கண்டு அவர்களது வாக்குமூலங்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மன்னிப்பு சபை, அனைத்துலக நெருக்கடிக்கான குழு போன்ற அமைப்புக்களும் சிறீலங்கா அரசு படித்த பாடங்கள் மற்றம் மீளிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளன. ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்கள், வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்கள், பொதுமக்கள் மீது தாக்குதல்கள் என தொடர்ந்து சிறீலங்கா அரசு மனித உரிமை மீறல்களை செய்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக உச்ச நீதிமன்ற நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா பொய்யான குற்றச்சாட்டில் குற்றவாளி எனக் காணப்பட்டு அவரது பதவியைப் பறித்தது அரசியல் பழிவாங்கல் என்றும் நீதித்துறையை பலவீனப்படுத்தும் முயற்சி என்றும் குற்றம் சாட்டியள்ளன.
எனவே என் அப்பன் குதிருக்குள் இல்லை என்ற மாதிரி சிறீலங்கா போரில் ஒருவரேனும் கொல்லப்படவில்லை, கொல்லப்பட்டவர்கள் வி.புலிகளால் கொல்லப்பட்டவர்கள் எனத் தொடர்ந்து பரப்புரை செய்ய முடியாது. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல மீண்டும் மீண்டும் சொன்ன பொய்களையே சொல்லக் கூடாது. சிறீலங்கா தனது உத்திகளை மாற்றி சிலவற்றையாவது ஒத்துக் கொள்ள வேண்டும்.
உண்மை என்னவென்றால் சுதந்திரத்துக்குப் பின்னர் சிறீலங்கா நாடானது அடிப்படையில் இனவாத கோட்பாட்டை கடைப்பிடிக்கும் அரசாக விளங்கி வருகிறது. அதனால் ஆட்சியாளர்கள் மாறினாலும் இனவாதக் கோட்பாடு தொடர்ந்து கூர்மைப்பட்டு வருகிறது. இந்த உண்மையை இப்போதுதான் அனைத்துலக சமூகம் புரியத் தொடங்கியுள்ளது. இதனால் உலக அரங்கில் சிறீலங்கா அரசு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. போருக்குக் கை கொடுத்த இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, அய்ரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் சிறீலங்காவை கை கழுவ ஆயத்தமாகி வருகின்றன.
சிலரைப் பல நாள் ஏமாற்றலாம். பலரை சில நாள் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்ற முடியாது. இந்தப் பாடத்தை சிறீலங்கா மிக விரைவில் படித்துக் கொள்ள இருக்கிறது.
அமைச்சர் மகிந்த சமரசிங்கி என்னதான் பேசினாலும் எப்படித் தலை கீழாக நின்றாலும் அய். நா. மனித உரிமை அவையில் சிறீலங்காவின் மானம் துயிலுரியப்பட்டு அம்மணமாக நிறுத்தப்படுவது நிச்சயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக