வெள்ளி, 15 மார்ச், 2013

மன்னாரிலும், கிளிநொச்சியிலும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மூடி மறைக்கும் செயல்: - செல்வம் அடைக்கலநாதன்

News Serviceஜெனிவா பிரேரணைக்கு எதிராகவும் அரசாங்கத்திற்கு சார்பாகவும் மன்னாரிலும், கிளிநொச்சியிலும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள், சுயநலத்திற்காக மேற்கொள்ளப்பட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்தும் துன்பத்தில் தள்ளும் ஒரு செயற்பாடாகவே காணப்படுவதாக பா.உறுப்பனர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவதுமன்னாரிலும், கிளிநொச்சியிலும் அண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் ஜெனிவா பிரேரணைக்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கலந்து கொண்ட மக்கள் எதற்காக தம்மை அழைத்தார்கள் என்று தெரியாத நிலையில் கலந்து கொண்டுள்ளனர்.
மீள்குடியேறிய மக்கள், மற்றும் மீனவர்களின் பிரச்சினைகள் உடன் தீர்த்து தரப்படும் என கூறப்பட்ட நிலையில் அவர்கள் வாகனங்களில் ஏற்றிவரப்பட்டு குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வைக்கப்பட்டனர். ஆனால் விபரம் அறிந்த மன்னார் நகர மக்கள் இதில் கலந்து கொள்ளவில்லை. இதே போன்று கிளிநொச்சியில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கிளிநொச்சி முன்பள்ளி ஆசிரியர்கள் பலவந்தப்படுத்தி அதில் அழைத்து வரப்பட்டு கலந்து கொள்ள வைக்கப்பட்டுள்ளனர்.
செற்ப அளவு ஊதியம் பெற்றுக்கொள்ளும் நிலையில் குறித்த ஆசிரியர்கள் தமது கற்றல் செயற்பாடுகளை மாணவர்களுக்கு வழங்கும் நிலையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கும் நிலையில் அந்த ஆசிரியர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனால் அந்த மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கலில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள், இழப்புக்கள் அனைத்தும் உண்மை இல்லையா? என்பதனை இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்களிடம் நான் கேட்க விரும்புகின்றேன். சுய நலத்திற்காக இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பவர்கள் சற்று உங்கள் மனச்சாட்சியை தட்டிப்பாருங்கள். முள்ளிவாய்க்காலில் நடந்தவற்றை மூடி மறைக்க நினைக்காதீர்கள். முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவம், எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகியவற்றை கொச்சைப்படுத்துகின்ற வகையில் குறித்த இரண்டு ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவே நாங்கள் கருதுகின்றோம்.
தனிப்பாட்ட உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டங்களை செய்ய துடிக்கின்றீர்கள்.
தயவு செய்து தமிழ் மக்களின் துன்ப துயரத்தில் குளிர் காயவேண்டாம் என கேட்டுக்கொள்ளுகின்றேன். இந்தியாவில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணா விரதப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனை நாங்கள் மதிக்கின்றோம். ஆனால் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கம் வகித்துள்ளவர்கள் தமது சுய நலத்திற்காக இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுகின்றனர். இதனை தமிழ் மக்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது. எனவே தமிழ் மக்கள் பட்ட துன்பங்களுக்கு உங்களால் குரல் கொடுக்க முடியாது விட்டாலும் பரவாயில்லை தமிழ் மக்கள் பட்ட துன்ப துயரங்களை மூடி மறைக்க வேண்டாம் என அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக