இலங்கை தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். இன்று காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய அவர், இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைக்காக இந்தியா உறுதியான நிலைப்பாட்டுடன் எதிர்க்கும். இலங்கையில் நடந்த போரின் போது தமிழ் இன படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த இந்தியா ஆதரிக்கும் என்றார்.
முன்னதாக இலங்கைத் தமிழர்கள் மீது நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்; அங்கு நடந்தது இனப் படுகொலைகள் என பிரகடனப்படுத்த வேண்டும் என்று இலங்கைக்கு எதிராக அமெரிக்க தீர்மானத்தில் திருத்தத்தை வலியுறுத்தும் வகையில் இந்திய நாடாளுமன்றத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' என்று தன்னை சந்தித்த 3 மத்திய அமைச்சர்கள் குழுவிடம் திமுக தலைவர் கருணாநிதி புதிய நிபந்தனை விதித்தார்.
இதை மத்திய அரசு செய்யாவிட்டால், மத்திய அரசில் திமுக நீடிக்காது என்றும் எச்சரித்திருந்தார். இதையடுத்து இது குறித்து காங்கிரஸ் எம்பிக்களுடன் அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டம் முடிந்த சில நிமிடங்களிலேயே மத்திய அரசுக்கு திமுக தந்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டது.
9வது நாளில் மாணவர் போராட்டம்: கொதிக்கும் கோவை!
ஈழத் தமிழர்களுக்காக கோவையில் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் கோவை நகரம் போராட்ட கோலத்தில் உள்ளது.
கோவையில் வேளாண் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் பற்றி எரியத் தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகம் காலவரையற்ற விடுமுறையை அறிவித்துள்ளது.
ஈழத் தமிழர் பிரச்னைக்காக கோவையில் அரசு கலை மற்றும் சட்ட கல்லூரி மாணவர்களால் தொடங்கப்பட்ட போராட்டங்கள் இப்போது அனைத்து கல்லூரி மாணவர் போராட்டங்களாக உருமாறியுள்ளன. இதனால் கோவை முழுவதும் போராட்டம் தீயாக பரவியது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக (TNAU) மாணவர்கள் 500 பேர் பல்கலைக்கழக வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் 25 பேர் பல்கலைக்கழக வளாகத்தில் 7வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்.
சாலைமறியலில் மாணவர்கள்
கோவை, மேட்டுப்பாளையம் சாலை, சரவணம்பட்டி கரட்டுமேடு, திருமலையாம்பாளையம், பாலக்காடு மெயின் ரோடு சந்திப்பு ஆகிய பகுதியில் கலை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் 1000க்கும் மேற்பட்டவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கோவை அடுத்த கருமத்தம்பட்டி நால்ரோட்டில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்
பொதுமக்களும் பங்கேற்பு கோவை பிள்ளையார்புரம், வள்ளல் நகர் பகுதியில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் நேற்று காலை கறுப்புக்கொடி ஏற்றினர். வீதிகளிலும் கறுப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
மிரட்டும் நிர்வாகம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 700 மாணவர்கள் நேற்று கூடியபோது, பல்கலைக்கழகத்துக்கு உடனே காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. "போராட்டத்தில் கலந்து கொள்ளும் மாணவர்கள் சஸ்பென்ட் செய்யப்படுவார்கள் என்ற மிரட்டலும் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர் மாணவர்கள்.
விரட்டபட்ட மாணவர்கள்
விடுமுறை அறிவிக்கப்பட்ட உடன் உடனடியாக மாணவர்கள் அனைவரும் விடுதிகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். நேற்றிரவு 9 மணிவரைதான் அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதையடுத்து கோயம்பேடு பஸ்நிலையத்தில் ஏராளமான மாணவர்கள் விடிய விடிய காத்திருந்து சொந்த ஊர் திரும்பினர்.
திரளும் கல்லூரிகள்
மாமல்லபுரம் ஆறுபடை வீடு பொறியியல் கல்லூரி நேற்று 250 க்கும் மேற்பட்ட மாணவர்களின் துணை கொண்டு, போராட்டம் செய்யும் சக மாணவர்களுக்கு ஆதரவு அளித்தும்,மத்திய அரசின் நாடகங்களை கண்டித்தும் போராட்டத்தில் இறங்கியது, அதில் சுமார் 40 மாணவர்கள் ஒரு நாள் அடையாள உண்ணா விரதமும், 8மாணவர்கள் இன்று இரண்டாவது நாளாக,உண்ணாவிரதத்தை தொடர்ந்தும் வருகின்றனர்,,,மேலும் கல்லூரி நிர்வாகம் விடுமுறை அளித்தும் இன்று 40மாணவர்கள் தொடர் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூரில் ஆரசு கலை கல்லுரி, புதுவை மத்திய பல்கலைக்கழக, விருதுநகர் ஸ்ரீ வித்யா பொறியியல் கல்லூரி, சசூரி பொறியியல் கல்லூரி, மதுரை சட்டகல்லுரி, நாகர்கோவில் இஞ்சினிரிங் கால்லூரி, ராசிபுரம் கல்லூரி, குமரி மாவட்டத்தில் சேவியர் பொறியியல் கல்லூரி, கிங்ஸ் பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு சாண்டி பொறியியல் கல்லூரி, முதலிய கல்லூரி மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
திருப்பூர், திருச்சி, கோவை, மதுரை முதலிய இடங்களிலும் உள்ள கல்லூரிகள் அனைத்தும் போராட்டத்தில் குதித்துள்ளன.
சென்னையில் மாணவர்கள் பேரணி
ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். தனி ஈழத்தை அங்கீகரிக்க வேண்டும். தமிழக மீனவர்களை சிங்கள இனவெறியர்கள் தாக்கி வருவதை தடுக்க வேண்டும் என்பதை வ-யுறுத்தி சென்னை ஆவடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பேரணி நடத்தினர். சுமார் 500 பேர் பேரணியில் கலந்து கொண்டனர். ஆவடி சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்றனர். சென்னைப் பல்கலைக்கழகம்
தொடர்ந்தும் உண்ணா விரதம்!
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை தொடர்கின்றனர். நேற்றைய தினம் துணைவேந்தர் தாண்டவன் மாணவர்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்தார்.
ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்! தனி ஈழம் அமத்திட வேண்டும்!! என்ற கோரிக்கைகளை சென்னைப் பல்கலைக்கழக சமூகத்தின் கோரிக்கையாக மத்திய மாநில அரசுக்கு வலியுறுத்த அனுப்புவதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று பல்கலைக்கழகம் அதிரடியாக மூடப்பட்ட நிலையில் உள் நுழைந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
கோவை, மதுரை, சென்னை, திருச்சி என்று தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஈழத் தமிழர்களுக்கான போராட்டத்தில் குதித்து வரும் கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களின் தொடர் போராட்டம் இன்று 9வது நாள் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
வெறிச்சோடி போன கோயம்பேடு மார்கெட்
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் இலங்கை தமிழர் பிரச்சினையில் போர் குற்றம் புரிந்த அதிபர் ராஜபக்சேவை கண்டித்து, தமிழர்களுக்கு ஆதரவாக இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் போர் குற்றம் புரிந்த அதிபர் ராஜபக்சேவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது, அரசியல் கட்சிகள், மாணவர் சமுதாயம் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் தற்போது வியாபாரிகளும் பங்கேற்றுள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
அதன்படி இன்று காலை, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 3500 கடைகள், பழ மார்க்கெட்டில் 1500 கடைகள் பூ மார்க்கெட்டில் 1000 கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்ததால் ஆட்கள் நடமாட்டமின்றி மார்க்கெட் வெறிச்சோடி கிடந்தது. வெளியூர்களில் இருந்து காய்கறி, பழம், பூ ஏற்றி வரும் லாரிகளும் இன்று நிறுத்தப்பட்டு விட்டது.
கடையடைப்பில் ஈடுபட்ட வியாபாரிகள் இன்று காலை ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு கோரி: சினிமா இயக்குநர்கள் இன்று உண்ணாவிரதம்
தனித் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு மற்றும் போர்க்குற்றவாளி ராஜபக்சவுக்கு தண்டனை கோரி தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இன்று சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது.
இதில் பங்கேற்க அனைத்து திரைப்பட அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க கூட்டம் அமீர் தலைமையில் நேற்று நடைப்பெற்றது. இதில் இலங்கை அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்:
01. இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு உடனே நடை முறைப்படுத்த வேண்டும்.
02. போர்க்குற்றவாளி ராஜபக்ஷவை சுதந்திரமான பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
03. ஈழத்தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
04. வாக்கெடுப்பு நடத்த ஏதுவாக இலங்கையில் தமிழர் பகுதிகளில் திணிக்கப்பட்டிருக்கும் சிங்கள குடியேற்றத்தை உடனே வெளியேற்ற இலங்கையை இந்தியா நிர்பந்திக்க வேண்டும்.
05. இனப்படுகொலை செய்த இலங்கையுடனான உறவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்தி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் 19.3.2013 செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் 6 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணா நிலைப் போராட்டம் நடத்த முடிவெடுத்திருக்கிறது.
இந்த அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கில்டு, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கம் மற்றும் சின்னத்திரை கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் 19.3.2013 அன்று ஒருநாள் படப்பிடிப்பு மற்றும் தங்களது பணிகளை தவிர்த்துவிட்டு, போராட்டத்தில் பங்கெடுத்து முழுமையான ஒத்துழைப்பை அளிக்குமாறு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மதுரையில் இளைஞர் தீக்குளித்துப் பலி!
மதுரையில் தீக்குளித்த 30 வயது இளைஞர் , உடல் கருகி பலியானார் மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள பாலம் ஸ்டேஷன் ரோடு பெட்ரோல் பங்க்கில் நேற்று இரவு 7 மணிவாக்கில் பைக்கில் வந்த ஒரு வாலிபர் தீடிரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
தனி ஈழம் மலரட்டும்... ராஜபக்சே ஒழிக! என்று கோஷமிட்டவாறு, கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில், பெட்ரோல் பங்கை நோக்கி ஓடினார்.
உடலில் தீப்பற்றிய நிலையில், இளைஞர் வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், அந்த நபரைத் தடுத்தனர். அருகில், பாதுகாப்புக்காக வைத்திருந்த மணல், தண்ணீர் நிரப்பிய வாளியை எடுத்து, அவர் மீது ஊற்றினர்.
கீழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். அவரை தடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஆரோக்கிய ராஜ் உடம்பில் சில இடங்களில் காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் யார், எனத் தெரியவில்லை. பாலம் ஸ்டேஷன் ரோட்டில் இருந்து வந்ததால், அவர் பந்தல்குடியை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், நீலநிற, "ஜீன்ஸ்' பேன்ட் அணிந்திருந்ததால், மாணவராக இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
நடந்தது என்ன? :
நேற்று இரவு 7:00 மணிக்கு தீக்குளித்த வாலிபர் பெட்ரோல் பங்க் அருகே வந்து, திடீரென தன் மீது, பெட்ரோலை ஊற்றிக் கொண்டார். அப்போது பெட்ரோல் பங்கில் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த ஆரோக்கியராஜ் என்ற ஊழியர் மீது, பெட்ரோல் துளிகள் தெரித்து விழுந்தன.
என்னவென்று பார்க்க அந்த ஊழியர் திரும்பியபோது, அந்த இளைஞர் தன்மீது பெட்ரோலை ஊற்றியபடி தீக்குளிக்க முயன்றது தெரிந்தது. அதிர்ந்த ஊழியர்கள் அவரை தள்ளி விட்டனர்.
அதற்குள் அந்த இளைஞர் தீ வைத்துக் கொள்ளவே, அவர் மீது பாதுகாப்பு வாளியில் இருந்த தண்ணீர், மணலை போட்டு தீயை அணைக்க முயன்றனர். அவர், சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக