திங்கள், 4 மார்ச், 2013

ஈழத்தமிழர்கள் வடக்கு, கிழக்கை அடைய விரும்புவதில் என்ன தவறு..? மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி

News Serviceதமிழ் இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு � தனிநாடு காண்பதுதான். சுதந்திர தனிநாடு அடைய வேண்டும் என்பதற்காகத்தான் லட்சக்கணக்கான தமிழர்கள் ரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். ஜெனிவா பிரகடனத்தின் அடிப்படையில் சுய நிர்ணய உரிமை ஒரு தேசத்தின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போது, தமிழர்கள் வடக்கு, கிழக்கு பகுதிகள் அடங்கிய தங்கள் சுதந்திர நாட்டை அடைய விரும்புவது, கேட்பது நியாயம் தானே என்று கூறியுள்ளார் மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி.
சுவிட்சர்லாந்து மக்கள் பேரவை, கனடிய மக்கள் பேரவை ஜெனிவாவில் மார்ச் 2-ஆம் திகதி தமிழர் உரிமைகளுக்கான மாநாட்டினை நடத்தியது. அம் மாநாட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ஆற்றிய உரை வருமாறு: தமிழ் ஈழம் பெற வேண்டுமென்ற உயரிய நோக்கத்திற்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த வீர மறவர்களுக்கும், கடந்த ஐம்பது ஆண்டு காலமாக ஈவு இரக்கமின்றி இனவெறி பிடித்த சிங்கள அரசும், ராணுவமும் இணைந்து நடத்திய இனப் படுகொலைக்கு ஆளான இலட்சக்கணக்கான மக்களுக்கும் என்னுடைய வீர வணக்கத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் பெரும் துன்பத்திற்கு ஆளான தமிழர்களின் நலனுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயல்படும் வைகோ தலைமையில் இயங்குகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட என்னுடைய பெயர் கணேசமூர்த்தி.
இங்கு நடைபெறுகின்ற அமர்வில் இலங்கையில் ஒரு தொடர்ச்சியான அமைதியை ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையைப் பற்றி விவாதிப்பதற்காகக் கூடியுள்ளோம். தொன்றுதொட்டு தமிழர்கள் வாழ்ந்து வந்த தொட்டில் பிரதேசம், சிங்கள அரசின் இனவெறி பிடித்த காட்டுமிராண்டித் தாக்குதல் காரணமாக கொலைக்களமாக மாற்றப்பட்டு விட்டது என்பதனைத் தாங்க முடியாத மன வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கைத் தீவில் வடக்கு கிழக்குப் பகுதியில் பூர்வீகக் குடிகளாக, சுதந்திரத் தமிழ்நாடாக, அமைதிப் பிரதேசமாகத் தமிழர்கள் வாழ்ந்த பகுதி திகழ்ந்தது என்பது வரலாற்று உண்மை. ஆனால், 2008 � ஆம் ஆண்டிலிருந்து தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் எல்லாம் மயானப் பிரதேசமாக மாறிவிட்டன. காலத்தின் அருமை கருதி சுருக்கமாக இனப் பிரச்சினையின் காரணத்தையும், தற்போதைய நிலைமையையும், அமைதியான தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கான தீர்வையும் முன்வைக்கின்றேன்.

அப்படிப்பட்ட தீர்வானது, தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபை வழிகாட்டுகின்ற மனித உரிமைப் பிரகடனத்தின் வாயிலாகச் சொல்லப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பெற்று கண்ணியத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கு வழி ஏற்படுத்தும். 1619-ஆம் ஆண்டு தமிழர்கள் தமது சுதந்திர நாட்டை அந்நியர்களுடன் நடந்த போரில் இழந்தார்கள். ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 4-ஆம் நாள் சுதந்திரம் வழங்கி சுதந்திர நாடாக அறிவித்தபோது ஆட்சி அதிகாரத்தைச் சிங்களவர்களிடம் ஒப்படைத்தனர். சிங்களவர்கள் தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தினர். எல்லா நிலைகளிலும் வாய்ப்புகளை இழந்த தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட, தமிழர் அமைப்புகள் எல்லாம் ஒன்று கூடி, 1976-ஆம் ஆண்டு ஆகஸ்டு 14-ஆம் நாள் வட்டுக்கோட்டையில் பன்னகம் என்ற இடத்தில் தந்தை செல்வாவின் சீரிய தலைமையில் நடைபெற்ற ஐக்கிய தமிழர் விடுதலை முன்னணியின் தேசிய கருத்தரங்கம் முக்கிய தீர்மானத்தைப் பிரகடனப்படுத்தியது.

இலங்கையில் தமிழர்கள் தனி தேசத்திற்குச் சொந்தக்காரர்கள். அந்த தேசம் சிங்கள தேசத்திலிருந்து வேறுபட்டது என்றும், சுதந்திரமான, மதச் சார்பற்ற சமத்துவச் சமுதாயமாக சுதந்திரத் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்ற அந்தத் தீர்மானம்தான் தமிழ் ஈழத்தின் �மாக்ன கர்ட்டாவாக�க் கருதப்படுகின்றது. 1977-ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற பொதுத் தேர்தல் தமிழ் மக்கள் மத்தியில் நடந்த பொது வாக்கெடுப்பாகும்.

அந்தத் தேர்தலில் சுதந்திரத் தனித் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று மக்கள் தீர்ப்பு அளித்தார்கள். எல்லா வகையிலும் பலம் பொருந்திய நிலையில் இருந்த தமிழர்களின் பிரதிநிதியாக இருந்த விடுதலைப்புலிகள் தாங்களாகவே முன்வந்து 2000-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி 30 நாட்களுக்குப் போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார்கள். அந்த தன்னிச்சையான போர்நிறுத்த அறிவிப்பு மேலும் 30 நாட்களுக்கு 2002 ஆம் வருடம் ஜனவரி 24-ஆம் திகதியிலிருந்து மேலும் நீட்டித்தார்கள். போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகும் வேண்டுமென்றே இலங்கை அரசாங்கம் அந்த ஒப்பந்தத்தைக் காற்றில் பறக்கவிட்டு, ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தையும் பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற கொடிய எண்ணத்தோடு செயல்பட்டது. 3,30,000 தமிழர்கள் தாக்குதல் இல்லாப் பகுதிகள் என்ற அடைப்புகளில் அடைக்கப்பட்டார்கள். அவ்வாறு அடைக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படவில்லை. தமிழர்களும், இளைஞர்களும் சொல்லொணாக் கொடுமைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டு இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

தமிழ்ப் பெண்களோ இளம் நங்கைகள், பெண்கள் எனப் பிரிக்கப்பட்டு, அவர்களது குடும்த்தையும் பிரித்து சித்ரவதைக்கு ஆளாக்கி, கற்பழித்து படுகொலை செய்தார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் மூவர் குழு தனது அறிக்கையில், மனித உரிமை ஆணையம் தனது சிறப்பு அமர்வில் மே 2009-இல் இயற்றிய சிறப்புத் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை.

இலங்கை இராணுவம் இதயத்தைப் பிளக்கக் கூடிய ஈவு இரக்கமற்ற கொடூர வன்முறையின் மூலமாக தேசியத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனைச் சுட்டுக் கொன்றுள்ளது. சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ காட்சி அந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்துகிறது. பாலச்சந்திரனின் கண் முன்பாக ஐந்து தமிழ் இளைஞர்கள் � விடுதலைப்புலிகள் தங்கள் கைகள் கட்டப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, அவர்கள் தலைமையில் அருகில் இருந்து குறிபார்த்துச் சுட்டுக் கொன்று அவர்கள் உடல்களை மைதானத்தில் வீசியது. சேனல் � 4 தொலைக்காட்சி, சிறுவன் பாலச்சந்திரன் 2 அல்லது 3 அடி தூரத்தில் இருந்து சுடப்பட்டுள்ளான்.

ஐந்து துப்பாக்கி வடுக்கள் அவரது நெஞ்சில் பதிந்து உள்ளன என்று குறிப்பிட்டுள்ளது. என் கண்களில் பீறிட்டு வரும் கண்ணீரோடு சொல்கிறேன். ஆயிரக்கணக்கான பாலச்சந்திரன்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ் இனத்தையே பூண்டோடு அழித்து விடத் துடிக்கும் அவர்களுடைய நடவடிக்கை இனப் படுகொலை என்று உறுதியாகச் சொல்கின்றேன். மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கை மனித உரிமை கண்காணிப்பகம் தனது அறிக்கையில், நடுங்க வைக்கின்ற பாலியல் வன்முறை, கற்பழிப்புச் செயல்களை மனம் பதறச் செய்யும் வகையில் விவரிக்கின்றது. இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களையும் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்றவர்களையும் கற்பழிப்பு மற்றும் பிற பாலியல் வன்முறை நடவடிக்கைகளை ஆயுதமாகப் பயன்படுத்தி கொடுந் துயரத்திற்கு ஆளாக்குகின்றது.

இலங்கையில் நடைபெற்ற பல்வேறு அடையாள அழிப்பு சம்பவங்கள் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மத வழிபாட்டு அடையாளங்களை அழித்தல், கலாச்சாரத் தாக்குதல் போன்றவைகளையும் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த மாநாட்டின் வாயிலாக மனித உரிமை ஆணையத்தை கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும். தன்னிச்சையான பன்னாட்டு விசாரணை அமைக்கப்பட்டு, அதன் வாயிலாக இலங்கை அரசு தமிழர்களின் மீது நடத்திய இனப்படுகொலையை தீர விசாரிக்க வேண்டும். மனித உரிமை ஆர்வலர்களும், மனித உரிமையைப் போற்றுகின்ற சுதந்திரத்தை நேசிக்கின்ற ஜனநாயக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபை விரைந்து இலங்கை அதிபர் மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

தமிழர்களின் காயப்பட்ட இதயம் நீதிக்காக ஏங்குகிறது. நீதி வழங்கப்பட வேண்டும். இந்த இனப்பிரச்சினைக்கான ஒரே தீர்வு, தமிழர்களுக்கான தனி நாடு காண்பதுதான். அதற்காகத்தான் இலட்சக்கணக்கானத் தமிழர்கள் இரத்தம் சிந்தினார்கள். தங்கள் இன்னுயிரை ஈந்தார்கள். ஏன்? இந்தத் தமிழ் சமுதாயம் தொடர்ந்து கொடூர வெறிபிடித்த சிங்கள இனவெறியனிடம் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும். கிழக்கு தைமூர் விடுதலை பெறுவதற்கு, தனிநாடாக உருவாதற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமேயானால், தெற்கு சூடான் சுதந்திர நாடாவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்தும்போது ஏன்? தமிழ் ஈழம் சுதந்திர நாடாவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்தக்கூடாது?

மனித உரிமை ஆணையம் தனது 22 ஆவது அமர்வில் கீழ்காணும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்:

1. தமிழர்களின் பகுதிகளில் இருந்து இலங்கை இராணுவம் வெளியேற வேண்டும்.

2. இலங்கையில் நடைபெறும் சித்ரவதை, அக்கிரமமான கொடூர தாக்குதல்கள், கற்பழிப்பு மற்றும் கொலைகளை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. அரசாங்கத்தின் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகும் தமிழர்களை உடனடியாக அவர்களுடைய வாழ்விடங்களை சீரமைத்து அங்கு குடியமர்த்த வேண்டும்.

4. பாதிக்கப்பட்ட தமிழர் வாழும் பகுதிகளுக்கு பன்னாட்டு சேவை அமைப்புகள், செஞ்சிலுவை அமைப்பு போன்றவைகள் சென்று அமைதியும், ஆறுதலும் தருவதற்கு வழிவகுக்க வேண்டும்.

5. தமிழர்களின் தொன்மையான பகுதிகளில் சிங்கள காலணி ஆதிக்கத்தை உடனடியாக தடுத்து, அப்படி தமிழர் வாழ்ந்த பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

6.முகாம்களில் சிறைக்காவலில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

7. தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மற்றும் உடந்தையாக செயல்பட்ட அனைவரும் ஐக்கிய நாடுகள் சபை நிர்மாணிக்கின்ற போர்க்குற்ற தீர்ப்பாயத்தின் முன்பாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

8. ஈழத்தமிழர்களுக்கென இலங்கையில் தனிநாடு உருவாவதற்கு பன்னாட்டு பார்வையாளர்களின் மேற்பார்வையில் புலம்பெயர்ந்த தமிழர்களும் பங்கேற்கின்ற வகையில் பொது வாக்கெடுப்பு நடைபெற வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக