இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக ஜெனீவாவில் நடத்தப்படவிருந்த போராட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதிகாரப் போட்டி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் வாழும் அரச சார்பு இலங்கையர்களினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாடு நடைபெறும் கட்டிடத்திற்கு முன்னால் இந்த போராட்டம் நடத்தப்படவிருந்தது. இந்தப் போராட்டத்திற்காக இத்தாலியிலிருந்து ஜெனீவா செல்ல பேருந்து ஆசனங்களை ஒதுக்கியவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது நாளைய தினமே திட்டமிட்ட மேற்படி போராட்டம் நடத்தப்படவிருந்தது. இந்தப் போராட்டத்தை வெளிவிவகார அமைச்சு ரத்து செய்யவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார். தாய் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் போராட்டம் நடத்தவிருந்த இலங்கையர்கள் நிகழ்வு ரத்து செய்யப்பட்டமையினால் அதிருப்தி அடைந்துள்ளனர். போராட்டங்களின் மூலம் சில சுயலாபத்தை ஈட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு போராட்டம் நடாத்திய நபர் ஒருவர் தனது உறவினர்களை தூதரகங்களில் பணிக்கு அமர்த்தியுள்ளார். 11 பேருந்துகளில் இத்தாலியிலிருந்து இலங்கையர்கள் ஜெனீவா நோக்கிச் சென்று போராட்டம் நடாத்தத் திட்டமிட்டிருந்தனர். எனினும், போராட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் தங்களது பெயரை பிரச்சாரம் செய்து கொள்வதில் காட்டிய அக்கறையினாலும், அதிகார போட்டியினாலும் இந்த போராட்டத்தை நடத்த முடியவில்லை என சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக