திங்கள், 22 ஏப்ரல், 2013

வடக்கில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பிற்கு எதிராக 24ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம்!

News Serviceவடக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட நில அபகரிப்பிற்கு எதிராக, எதிர்வரும் 24ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. 24ஆம் திகதி முற்பகல் 11.00 மணி தொடக்கம் 1.00 மணி வரை இந்தப் போராட்டத்தை வலி. வடக்கு மற்றும் நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்டு நடத்தவுள்ளதாக முன்னணி அறிவித்திருக்கின்றது. இது தொடர்பில் முன்னணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கடந்த மாதம் அரசாங்கத்தின் காணி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விசேட அலுவலகம் ஒன்றினை திறந்து வைத்திருந்தார். அதன் பின்னராக யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் பல்வேறு படையணிகளுக்காக அலுவலகங்களையும், தளங்களையும் நிரந்தரமாக்குவதற்காக தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை சுவீகரிப்பதற்காக காணிச் சுவீகரிப்புச் சட்டத்தில் பிரிவு 2இன் கீழான அறிவித்தல்கள் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வலிகாமம் வடக்கு உட்பட குடாநாட்டின் பல பகுதிகளிலுமிருந்து கடந்த 20 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழும் 30,000 இற்கும் அதிகமான மக்கள் நிரந்தரமாக தமது வாழ்விடங்களை இழக்கும் நிலை தோன்றியுள்ளது. மேற்படி காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக நடைபெறுகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் இராணுவக் குறைப்பு நடவடிக்கையில் தாம் ஈடுபடுவது போல பாசாங்கு காட்டிவரும் அரசு மறுபுறத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான நில அபகரிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினால் தமிழ் மக்களுக்கு எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இந் நிலச் சுவீகரிப்பு நடவடிக்கையை உடன் நிறுத்தக் கோரியும், இடம்பெயர்ந்து வாழும் வலி. வடக்கு உட்பட்ட அனைத்து மக்களையும் உடன் மீள் குடியமர அனுமதிக்கக் கோரியும், இவ்விடயத்தில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாகவும் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வலி. வடக்கு உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களது வேண்டுகோளின் அடிப்படையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் மேற்படி போராட்டம் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக