பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பின்கீழ் வடக்குத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று அதன் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவிடம் தாம் கோரிக்கை விடுக்கவுள்ளதுடன், தேர்தல்கள் ஆணையாளரிடமும் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது. அரசு தெற்கில் ஆடிவரும் விளையாட்டுகளை வடக்கில் ஆடமுடியாது. ஏனெனில், வடக்குத் தேர்தலை சர்வதேசமும் அவதானித்து வருகிறது. இவ்வாறான நிலையில், அந்தத் தேர்தலை நடத்துவது குறித்து நாம் அரசிடம் முன்வைத்துள்ள மூன்று நிபந்தனைகளையும் அது ஏற்காவிட்டால், தேர்தல் நடத்தப்படுவதென்பது பொய்யானதாகிவிடும் என்று ஐ.தே.கவின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
வடக்குத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் நாம் ஏற்கனவே அரசிடம் முன்வைத்துள்ள மூன்று நிபந்தனைகளையும் அது ஏற்றுக்கொள்ளவேண்டும். சுயாதீன பொலிஸ், தேர்தல் திணைக்களங்களை அரசு நிறுவியாகவேண்டும். இல்லாவிட்டால், வடக்குத் தேர்தலை சுயாதீனமாக நடத்தமுடியாது.
வடக்கில் "உதயன்' பத்திரிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்தும் கூட்டங்களின் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் வடக்கில் சிவில் ஆளுநர் உடனடியாக நியமிக்கப்படவேண்டும். ஏனெனில், தற்போதைய ஆளுநர் வடக்கில் சிவில் ஆட்சியை நிறுவ நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.
அடுத்ததாக, பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பில்கீழ் வடக்குத் தேர்தல் நடத்தப்படவேண்டும். இந்த மூன்று நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு அரசு வடக்குத் தேர்தலை நடத்தவேண்டும். இல்லாவிட்டால் அங்கு நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடக்காது.
தெற்கில் நடத்தப்படும் தேர்தல்களில் அரசு விளையாட்டுக் காட்டுவதுபோல வடக்கில் விளையாட்டு ஆடமுடியாது. ஏனெனில், வடக்குத் தேர்தலை அரசு எப்படி நடத்தப்போகிறது என்பதை சர்வதேச நாடுகள் அவதானித்துக் கொண்டிருக்கின்றன.
இதனால் வடக்குத் தேர்தல் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பின்கீழ் நடத்தப்படவேண்டும் என்று அதன் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவிடம் நாம் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளோம். அத்துடன், தேர்தல்கள் ஆணையாளரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளோம்.
எமது கட்சியின் வடக்கு பயணம் முடிவடைந்த பின்னர் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் தயாராகவுள்ளோம். வடக்குத் தேர்தலுக்கு நாம் தயாராகவுள்ளோம். நாளை 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதிவரை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட பகுதிகளுக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு பயணம் செய்யவுள்ளது என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக