வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பிலும் இனப்பிரச்சனைக்கான தீர்வு விவகாரம் இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற செயற்பாடு குறித்தும் , அண்மைக்காலமாக கூட்டமைப்பு தொடர்பில் அரசாங்க தரப்பினர் வெளியிட்டுவரும் கருத்துக்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று முக்கிய அறிவிப்பினை வெளியிடுவார். என எதிர்பார்க்கப்படுகின்றது.தந்தை எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் 36 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளை நடத்தும் தந்தை செல்வா நினைவுப் பேருரை வழைமை போல இம்முறையும் கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் தந்தை செல்வாவின் நினைவு தினமான இன்று 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடை பெறவிருக்கின்றது.இலங்கை தமிழ் அரசுக்கட்சி ,தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவரான இரா. சம்பந்தன் எம்.பி. யின் தலைமையில் நடை பெறும் இந்நிகழ்வில் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் “இலங்கைத் தமிழர்கள் செல்வது எங்கே” என்ற தலைப்பில் நினைவுப் பேருரை நிகழ்த்துவார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் கொழும்பு மாவட்டக்கிளையின் தலைவர் சட்டத்தரணி கே. வி. தவராஜா தலைமையுரையையும், சட்டத்தரணி ஜி. இராஜகுலேந்திரா நன்றியுரையையும் நிகழ்த்துவர். பூங்கோதை சந்திரஹாசனின் நெறியாள் கையில் உருவாக்கப்பட்ட எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் தமிழ் உரிமைகளுக்கான அறவழிப் போராட்டமும் என்ற ஆவண திரைப்படத் தொடரின் முன்னோட்டமும் இந்நிகழ்வில் திரையிடப்படவுள்ளது. இந்த நிகழ்வில் தலைமையுரை ஆற்றுகையில் சம்பந்தன் எம்.பி. கூட்டமைப்பின் முக்கிய அறிவிப்பினை வெளியிடுவதுடன் எதிர்கால திட்டங்கள் குறித்தும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக