வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் ஒரே நேரத்தில் 6400 ஏக்கர் பொதுமக்களின் குடியிருப்பு காணிகளை இராணுவ தேவைகளுக்காக சுவீகரிக்கும் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அந்தக் காணிகளைப் பொதுமக்கள் சென்று பார்வையிடக் கூடாது என்று கோரியிருக்கின்றது. காணி உரிமையாளர்கள் சென்று பார்க்க முடியாதவாறு அதியுயர் பாதுகாப்பு நிலையில் வைத்துள்ள இந்தக் காணிகளை காணி எடுத்தல் சட்டப்படி சுவீகரிக்கப் போவதாகக் கூறி, அதற்கான அறிவித்தல்களை அந்தக் காணிகளில் அரசாங்கம் ஒட்டியிருக்கின்றது. ஆயினும் அந்தக் காணிகள் யாருடையவை என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளை மக்கள் படையினருக்கு இனம் காட்டக் கூடாது. அவ்வாறு காட்ட வேண்டாம். அந்தக் காணிகளை நீங்கள் பார்க்கப் போவது, அவற்றை நீங்களே படையினரிடம் ஒப்படைத்தது போலாகிவிடும்" என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார். முதல் இந்தக் காணிகளைப் பொதுமக்கள் சென்று பார்வையிடலாம் என்று தகவல் வெளியாகியிருக்கின்ற நிலையிலேயே மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவி சாந்தா அபிமன்னசிங்கத்தின் தலைமையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று புதன்கிழமை வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்று காணிகளைப் பார்வையிட முயற்சித்த போதிலும், அதற்கு இராணுவம் அனுமதி வழங்கவில்லை.
சுவீகரிக்கப்படவுள்ள 6400 ஏக்கர் காணிகளைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள வீதிவழியாக வேண்டுமென்றால் சட்டத்தரணிகள் சென்று பார்வையிடலாம் என அங்கிருந்த இராணுவ அதிகாரிகள் தெரிவித்திருந்ததாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்திருக்கின்றார். பொதுமக்கள் காணிகளைச் சென்று பார்வையிடலாம் என்ற தகவல் வெளியாகியதையடுத்து, வியாழனன்று காலை அங்கு சென்ற சுமார் 20 - 25 பொதுமக்களை, அங்கு செல்ல அனுமதிக்காமல் மாவிட்டபுரம் வீதி சோதனைச்சாவடியில் வைத்து இராணுவத்தினர் திருப்பி அனுப்பி வைத்ததாக வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக