அவுஸ்திலேலியாவில் அடைக்கலம் புகுந்துள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் துன்புறுத்தியதாகவும், கடுமையாக விசாரணை நடத்தியதாகவும் குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மிகைப்படுத்திய பிரச்சாரங்களின் ஓர் கட்டமாக இதனை அவதானிப்பதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
பொருளாதார நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தி வருவதாகவும், இதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு பிரச்சாரம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் துன்புறுத்துவதாகத் தெரிவிப்பதன் மூலம் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் சில தரப்பினர் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக ஆயிரம் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்பதனை நியாயப்படுத்தும் வகையில் இவ்வாறு குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார நோக்கங்களுக்காகவே தற்போது அவுஸ்திரேலியா உள்ளிட்ட வேறும் நாடுகளில் புகலிடம் கோருவதாகவும் இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக