வெள்ளி, 17 மே, 2013

எரிக் சொல்ஹெய்ம் உட்பட 11 நோர்வே அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

News Serviceஇராஜதந்திர விலக்குரிமை இருந்தாலும், நோர்வே தூதுவருக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியும் என்று கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹில்டே ஹரால்ட்ஸ்டட், முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோனாஸ் கார் ஸ்ரோர் உள்ளிட்ட 11 நோர்வே அதிகாரிகளுக்கு எதிராக, 98 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி கலாநிதி குமார் ரூபசிங்க சமர்ப்பித்துள்ள வழக்கின் மீதான விசாரணையின் போதே, கொழும்பு மாவட்ட நீதிபதி அமலி ரணவீர இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சிறிலங்காவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்களுக்கு 2008இல் குமார் ரூபசிங்கவின் நிறுவனத்துடன் நோர்வே மற்றும் பிரித்தானிய தூதரகங்களின் சார்பில் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. 2008 தொடக்கம் 2011ம் ஆண்டு வரை அமைதியை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கு இந்த உடன்பாடு செய்யப்பட்டது. எனினும் 2009இல் இந்த உடன்பாட்டை நோர்வே அரசாங்கம் முறித்துக் கொண்டது. இதற்கு எதிராகவும், தனக்கு வழங்கப்பட வேண்டிய 98,528,065 ரூபா கொடுப்பனவை வழங்க உத்தரவிடக் கோரியும் குமார் ரூபசிங்க வழக்குப் பதிவு செய்திருந்தார். எனினும், 1961ம் ஆண்டு வியன்னா உடன்பாட்டுக்கு அமைய, இராஜதந்திர விலக்குரிமை தமக்கு உள்ளதாகவும், தமக்கு எதிராக சிறிலங்காவில் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்றும் நோர்வே தூதுவர் மற்றும் நோர்வே அதிகாரிகள் சார்பில் பதில் மனு சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த மனுவையே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன், நோர்வே தூதுவருக்கு இராஜதந்திர விலக்குரிமை இருந்தாலும் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யலாம் என்று அறிவித்துள்ளது. கொழும்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக