வெள்ளி, 24 மே, 2013

13வது திருத்தத்தை மட்டுமன்றி முழு அரசியல் யாப்பையும் மாற்ற வேண்டும் - பொதுபல சேனா!

News Service13ஆவது திருத்தத்தையும் மாகாணசபை முறைமையையும் மாற்றி இனங்களுக்கிடையில் நல்லுறவையும் நாட்டில் சமாதானத்தையும் கொண்டுவர முடியாது. இந்நாட்டின் அரசியல் அமைப்பில் வெளிநாடுகளில் அழுத்தங்கள் காணப்படுவதால் முழு அரசியல் யாப்பையும் மாற்றியமைக்க வேண்டும்மென பொதுபலசேனா அமைப்பின் இணைப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத் தரப்பு அறிவிப்புக்கள் வெளிவருவதற்கு முன்பே நாம் 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டுமெனவும் மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டுமெனவும் கூறிவருகின்றோம். அரசியல் கட்சிகளின் பிண்ணனியில் வடமாகாணசபைத் தேர்தலுக்கு எதிராக பேச வேண்டிய அவசியம் பொதுபலசேனா அமைப்புக்கு கிடையாது. பொதுபல சேனா அமைப்பு ஆரம்பித்து ஒரு வருட காலம் பூர்த்தியடைந்து விட்டது.மக்கள் பலத்தைக் கொண்டு இயங்கி வரும் பொதுபல சேனா அமைப்புஇன்று அரசியல் விடயங்களில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பதவிகளை இலக்காகக் கொண்டு நாம் அரசியல் பேசவில்லை எமக்கு பதவிகளைத் தாண்டி ஒரு சமூகப் பொறுப்பு காணப்படுகின்றது. அத்துடன் பொதுபலசேனா கட்சி ஒன்றை ஆரம்பிக்கவும் முயற்சி செய்யவில்லை.

நாட்டின் சமாதானத்திற்கு அனைத்து இன மக்களும் ஒன்றாக பாடுபட வேண்டுமெனவும் நாம் தெரிவிக்கின்றோம். ஆனால் எமது யாப்பிலுள்ள சில சட்டங்கள் நாட்டினை பிரிவினைவாதப் போக்குக்கு இட்டுச் செல்கின்றது. உதாரணமாக 13ஆவது திருத்தமும், மாகாணசபை முறைமையையும் நாட்டை பிளவுபடுத்தும் அரசியல் அமைப்புச் சட்டங்களாகும்.குறித்த இரு சட்டங்களை மட்டும் மாற்றுவதன் மூலம் நாட்டில் சமாதானத்தையும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி விட முடியாது. தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பினை மாற்றியமைப்பதன் மூலமே நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவரமுடியும்.

ஆங்கிலேயர்களால் இந்நாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்ட அரசியல் யாப்பு காலத்துக்கு காலம் மாறுபட்ட போதும் மேற்குலக ஆதிக்கங்களுக்கும் அந்நிய நாடுகளின் ஆதிக்கங்களுக்கும் அரசியல் யாப்பு இடமளிக்கின்றது. இதனைத் தடுப்பதற்காக நாட்டிற்கு ஏற்ற தேசிய அரசியல் அமைப்பொன்றை அரசாங்கம் கொண்டுவரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக