இலங்கையின் வட மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படையாக அறிவித்திருந்தாலும் அந்தத் தேர்தல் நடைபெறுமா என்று கேள்விக் குறிகளும் எழுந்துள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணியின் தலைவர் குணதாச அமரசேகர ஆகியோர் இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். பின்னர் பௌத்த கடும்போக்கு அமைப்பு என்று கருதப்படும் பொதுபல சேனா எதிர்ப்பை வெளியிட்டது. இப்போது ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமயவும் இதை எதிர்க்கிறது. மாகாண சபைகளை உருவாக்கி அவற்றுக்கு அதிகாரங்களை வழங்கும் அரசியல் சாசனத்தின் 13 ஆவது திருத்தம் இந்திய அழுத்தங்களின் காரணமாகவே கொண்டு வரப்பட்டது என்றும், உச்சநீதிமன்றத்தின் அனுமதியை பெறவில்லை என்றும் ஹெல உறுமயவின் தலைவரும அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இது அரசியல் சாசனத்தில் உள்ளது என்பதும் அரசுக்கு அதை அமுல்செய்ய வேண்டிய கடப்பாடு உள்ளது என்பதும் உண்மை என்றும், சட்டத்தின்படி அது சரியென்றாலும் அதை நியாயப்படுத்த முடியாது எனவும் சம்பிக்க ரணவக்க கூறுகிறார்.
வடமாகாண சபைத் தேர்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் ஈழத்துக்கான ஒரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பாக பயன்படுத்தக் கூடும் எனவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விரோத மனப்பான்மையை வளர்த்து, நாட்டை காப்பாற்றிய போர் வீரர்களை அவமானப்படுத்துகின்றனர் எனவும் ஹெல உறுமயவின் தலைவர் மேலும் தெரிவித்தார். பழையதைக் கிளறும் அவர்கள் நாட்டின் ஜனாதிபதியை போர்க்குற்ற நீதிமன்றங்களின் முன்னர் இழுக்க முயல்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார் ரணவக்க. ஆனால் அவரது இந்தக் கருத்துக்கள் எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என்று இலங்கையின் பல தமிழ்க் கட்சிகளும், இடதுசாரி அமைப்புகளும் கூறியுள்ளன. இந்தத் தேர்தலின் மூலமே இலங்கை அரசு தனது நம்பகத்தன்மையை நிலைநிறுத்த முடியும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசுகள் அதிகாரத்தைப் பகிர முன்வராததுதான் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு வழி வகுத்தது என்றும் மனோ கனேசன் கூறுகிறார். வடமாகாண சபைக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்று இலங்கை அரசு ஐ.நா உட்பட சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளுக்கு வாக்குறுதி அளித்துள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக