முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மே 18ஆம் திகதி அனைத்து தமிழ் மக்களும் தமது வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. வன்னியில் இன அழிப்புப் போரை நடத்திய சிங்கள அரசு, மே18 ஆம் திகதி யுத்த வெற்றிவிழாவாகக் கொண்டாடுகின்றது. ஆனால் தமிழ் மக்கள் அன்றைய தினத்தை தமிழின விடுதலையை வென்றெடுக்க உறுதி கொள்ளும் நாளாக பிரகடனப்படுத்தி யுத்தத்தில் மரணித்த தமது உறவுகளை நினைவுகூருவார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவாட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் யுத்தவெற்றிவிழா இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மாவை.சேனாதிராஜா எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் கூறியது வருமாறு,
வன்னியில் மனிதாபிமானப்போர் என்று கூறி இலட்சணக்கணக்கில் எமது தமிழ் உறவுகளை அரச படைகள் கொன்று குவித்தன சர்வதேச சமூகமே தற்போது உணர்ந்து விட்டது. எனவே இனவழிப்புப் போரை நடாத்திய சிங்கள அரச தரப்பினர் ,மே 18 ஆம் திகதியை யுத்த வெற்றிவிழாவாகக் கொண்டாடுவதனால் எந்தப் பயனும் அவர்களுக்கு ஏற்படப்போவதில்லை. சர்வதேசத்தின் பிடியிலிருந்து சிங்கள அரசு ஒரு போதும் தப்பமுடியாது. இந்த யுத்த வெற்றிவிழா மூலம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. மாறாக அது தமிழர் மனங்களில் இன்னும் கொதிப்பை ஏற்படுத்தும். யுத்த வெற்றிவிழா மூலம் தமிழரைத் தோல்விகண்ட சமூகமாக எடுத்துக்காட்டாக சிங்கள அரசு நினைப்பது வெறும் முட்டாள்தனமாகும். யுத்தத்தில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைத்து தமிழர்கள் கண்ணீர்விட்டு அழக்கூட இந்த நாட்டில் சுதந்திரம் இல்லாத நிலையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் அடிபணியவில்லை சோர்வடையவில்லை தடைகளைத் தகர்த்து எறிந்து துணிவுடன் உள்ளார்கள்.
தமிழர் தாயகத்தில் இராணுவத்தின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ்க்கூட்டமைப்புடன் இணைந்து வாழ்வுரிமைப்போராட்டத்தில் தமிழ் மக்கள் குதித்துள்ளார்கள். சொந்த மண்ணை மீட்கும் வரை கொண்ட இலட்சியத்தை அடையும் வரை தமிழ் மக்கள் ஜனநாயக வழியில் போராடுவார்கள். எதற்கும் அஞ்சமாட்டர்கள் உண்மையை உணர்ந்து சர்வதேச சமூகம் தற்போது நம்பக்கம் உள்ளது என்றும் தெரிவித்தார். மாவை எம்.பி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 18ஆம் திகதியன்று தமிழ் மக்கள் அனைவரும் முள்ளிவாக்காலில் உயிர்நீத்த தமது உறவுகளுக்காகப் பிரார்த்தனைகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கின்றோம். அன்றையதினம் மக்கள் தமது வீடுகளில் தீபமேற்றி உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். அத்துடன் உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காக ஆலயங்களில் வழிபாடுகள் மேற்கொள்வதுடன், முள்ளிவாய்க்கால் நினைவுநாளை உணர்ச்சிபூர்வமாக அனுஷ்டிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுக்கிறது. நினைவுதின நிகழ்வின் பிரதான நிகழ்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை காலை 10மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அதேவேளை தமிழர் தாயகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவுநாளைப் பொது இடமொன்றில் அனுஷ்டிப்பது தொடர்பில் நாம் கலந்துரையாடி வருகின்றோம் என்று தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக