மன்னார், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 1500 சிங்கள குடும்பங்கள் அங்கு அழைத்து வரப்பட்டு குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன் அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. சுமார் 5 ஆயிரம் குடும்பங்களை குடியமர்த்த நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்வுகளை சந்தித்த முசலி பிரதேசத்தில் உள்ள தமிழ், முஸ்ஸிம் மக்கள் இது வரை உரிய முறையில் மீள் குடியேற்றப்படவில்லை. அவர்கள் காடுகளிலும், தற்காலிக கொட்டில்களிலும் தொடர்ந்தும் அகதி வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் முசலியில் சிங்கள மக்களை குடியமர்த்தும் முகமாக முதற்கட்டமாக 1500 குடும்பங்கள் பஸ்களில் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இங்கு தற்காலிக கொட்டில்களை அமைக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் மீள்குடியேற்றங்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரிவாக ஆராயவுள்ளது. தமிழ், முஸ்ஸிம் மக்களின் பிரதிநிதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெகு விரைவில் அழைத்து இந்த சிங்கள குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்து இக் குடியேற்றத்திற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக