மட்டக்களப்பு புல்லுமலை, உறுகாமக் கிராமங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக சென்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ச தலைமையிலான குழுவினரிடம் துண்டுப்பிரசுரம் கையளித்த இருவரை இலங்கை புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.கிழக்கு மாகாணத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தில் மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உறுகாமக் கிராமத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி 25 முஸ்லீம் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவதைக் கண்டித்து நேற்றைய தினம் (22.05.2013) சென்றிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக்காந்தா மற்றும் பசில்ராஜபக்ச தலைமையிலான குழுவினரிடம் உறுகாமம் வாழ் தமிழர்கள் என்ற பெயரில் துண்டுபிரசுரங்களை வழங்கியுள்ளனர்.
குறிப்பிட்ட துண்டுபிரசுரத்தில் உறுகாமத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு ஏற்கனவே ஏறாவூரில் ஈராக் அரசாங்கத்தினால் சதாமுசைன் கிராமம் என்ற பெயரில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டு உள்ளதாகவும். ஆனால் இன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கென இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் வீடுகளை இன நல்லிணக்கம் என்றபெயரில் தமிழர்களிடமிருந்து தட்டிப்பறித்து இரண்டாவது தடவையாக குறிப்பிட்ட முஸ்லீம்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள உறுகாமம் வாழ் தமிழர்கள் இது சம்பந்தமாக ஒரு துண்டுபிரசுரத்தையும் வெளியிட்டுள்ளதுடன் குறிப்பிட்ட துண்டுபிரசுரங்களை நேற்று சென்றிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக்காந்தா மற்றும் பசில்ராஜபக்ச தலமையிலான குழுவினரிடம் வழங்கியுள்ளனர்.
இதனை அவதானித்த இலங்கை புலனாய்வுத்துறையினர் துண்டுபிரசுரங்களை வழங்கிய இருவரை பின்னர் கைதுசெய்து கரடியனாறு பொலீசில் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இராஜபுரத்தைச் சேர்ந்த கந்தசாமி யோகராசா மற்றும் உறுகாமத்தைச் சேர்ந்த பரமசிவம் சுரேஸ்குமார் ஆகிய இருவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
இதே நேரம் தமிழ் மக்களுக்காக வழங்கப்பட்ட வீடுகளை சிங்கள,முஸ்லீம் குடும்பங்களுக்கு வழங்குவதன் ஊடாக தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக கூறும் கிராம தலைவர்கள் தமிழர்களின் யுத்த அழிவுகளை பொருட்படுத்தாது முப்பதாண்டுகால யுத்தத்தில் உறுகாமம், புல்லுமலை, மங்களகம போன்ற பகுதிகளில் வாழ்ந்த மூவின மக்களுக்கும் ஒரேயளவிலான பாதிப்புக்களே ஏற்பட்டதென கூறுவதை ஒருபோதும் எற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ள உறுகாமத் தமிழர்கள் அபிவிருத்தி, இனநல்லிணக்கம் என்ற போர்வையில் இந்திய அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து தமிழர்களின் காணிகளை மற்றயோருக்கு வழங்குவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தச் செய்தி மட்டக்களப்பில் இருந்து எமக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை அதிகரிக்கவைக்கும் செய்தி எனக் கருதுபவர்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலை அனுப்பி வைத்தால் குளோபல் தமிழ்ச் செய்திகள் அதனையும் பிரசுரிக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக