தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு விடயம் தொடர்பில் தமிழ்ச் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி தமிழ் அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்பினரையும் ஒருங்கிணைத்து அதன் மூலம் இவ்விடயத்தை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு அதை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.இத்தருணத்தில் சமரசமாக எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓர் அங்கத்துவக் கட்சியாகிய தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) பல முயற்சிகளை ஆரம்பித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பாக நேற்று முன்தினம் சனிக்கிழமை மன்னார் ஞானோதயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
.
அவர் மேலும் கூறியவை வருமாறு
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளும் தமது பரிபூரணமான ஒத்துழைப்பை தந்து இந்த விடயம் தொடர்பாக சமரசமாக ஒரு முடிவை எடுக்க முயற்சிக்க வேண்டும்.
.
குறித்த கலந்துரையாடலில் தற்போது தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பல்வேறு பாரதூரமான பிரச்சினைகள், இனப்படுகொலைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
.
இவ்விடயம் தொடர்பாக தமிழ்ச் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழ் சிவில் சமூக அமைப்புகள் என்பவற்றையும் ஒற்றுமைப்படுத்தி இதனை எவ்விதமாகக் கையாள வேண்டும் என முடிவுகள் எடுக்கப்பட்டு அதை நிறைவேற்ற வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது என்றார் இரா.சம்பந்தன்.
.
இதுதொடர்பாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை கருத்து தெரிவிக்கையில்:
"தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கக்கூடிய அரசியல் தீர்வு சம்பந்தமாக பொது நிலைப்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பாக வரைவொன்றை மேற்கொள்ள குழுவொன்று உருவாக்கப்பட்டது.
.
இந்த விடயங்கள் தொடர்பாக விரைவில் மீண்டும் கூடி கலந்துரையாடுவது என முடிவெடுக்கப்பட்டது'' என்றார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்:
.
"தமிழரசுக்கட்சி தனது முடிவில் இருந்து மாறவில்லை எனவே நான்கு கட்சிகளும் இணைந்து ஓர் நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது'' என்றார். இதேவேளை, மேற்படி சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வதில் இணக்கப்பாடு ஏற்படவில்லை என தெரிவித்திருந்ததுடன் தமிழரசுக்கட்சி தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
.
இந்த சந்திப்பு தொடர்பில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்:
.
"பதிவு செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்ட முதல் அமர்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ரீதியில் விவாதிக்கப்பட்டது. கட்சியை பதிவு செய்வது தொடர்பில் எனது கருத்தாக தமிழீழ விடுதலை இயக்கம் நல்லெண்ண முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.
.
அது தொடர்பான சந்திப்புக்களை நாம் தமிழரசுகட்சியுடன் மேற்கொண்டுள்ளோம். இந்தவகையில் தமிழரசுக்கட்சி சில விட்டுக்கொடுப்புகளுக்கு புரிந்துணர்வின் அடிப்படையில் வருவதாக தெரிவித்துள்ளனர்.
.
அந்த அடிப்படையில் உயர்மட்டக்குழு அமைக்கின்றபோது ஏனைய நான்கு கட்சிகளினதும் பிரதிநிதிகள் கூடுதலான அங்கம் வகிப்பதற்கு இணக்கம் தெரிவித்துமுள்ளனர்.
.
இதேபோல் புரிந்துணர்வு அடிப்படையில் தேர்தல் திணைக்களத்தில் பதிந்து செயற்படுவதற்கும் தமிழரசுக்கட்சியினர் ஒப்புக்கொண்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் ஒரு வாரத்துள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தயாரிப்பதற்கான பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
.
அந்த ஒப்பந்தத்தை ஏனைய கட்சிகளுடன் இணைந்து விவாதித்து செயற்படலாம் என எங்களுக்குள் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது'' என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக