ஞாயிறு, 6 அக்டோபர், 2013

சல்மான் குர்ஷித் இன்று இலங்கை பயணம்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இரு நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைக்கு திங்கள்கிழமை (அக்டோபர் 7) புறப்படுகிறார்.

கடந்த ஆண்டு அமைச்சராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இலங்கைக்கு செல்லும் அவர் செவ்வாய்க்கிழமையும் அங்கு இருப்பார்.

இப் பயணத்தின்போது, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸிடம் இரு தரப்பு உறவுகள் குறித்து அவர் விரிவாகப் பேச உள்ளார். மேலும், இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது, சிறைபிடிக்கப்படுவது குறித்து அவர் பேசக்கூடும் எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் இந்திய மீனவர்கள் அதிகளவில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதால், இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மீனவர்களின் நலன், பாதுகாப்பு ஆகியவை குறித்து மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்று இலங்கையிடம் சல்மான் குர்ஷித் வலியுறுத்த உள்ளார். இது தவிர, வர்த்தகம், முதலீடு, வளர்ச்சி ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பாகவும், இரு அமைச்சர்களும் விவாதிக்க உள்ளனர். சம்பூர் அனல் மின்சார நிலையத் திட்டம், இலங்கைக்கு இந்திய தொழில்நுட்ப உதவிகளின் அம்சங்கள் ஆகியவை குறித்தும் இரு நாட்டு அமைச்சர்களும் பேச உள்ளனர்.

வடக்கு மாகாண முதல்வரை சந்திக்க ஏற்பாடு: அண்மையில் இலங்கை வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோரையும் சல்மான் குர்ஷித் சந்தித்துப் பேச உள்ளார். மேலும், இலங்கை அதிபர் ராஜபட்ச உள்பட அரசுத் தலைவர்களையும் அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் 50 ஆயிரம் வீடுகள் கட்டி அளிக்கும் திட்டம் உள்பட வளர்ச்சித் திட்டப் பணிகளையும் அவர் ஆய்வு செய்ய உள்ளார்.

"தற்போதைய நிலையில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ள நிலை குறித்தும், ஓர் ஒற்றையாட்சி முறைக்குள் அதிகாரப் பரவலாக்கல் சாத்தியமல்ல என்பதையும் சல்மான் குர்ஷிதிடம் எடுத்துரைக்க உள்ளோம்' என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ பேச்சாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் மாநாடு: வரும் நவம்பர் 15 முதல் 17 வரை காமன்வெல்த் மாநாடு இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாகவும் இரு தரப்பு அமைச்சர்கள் சந்திப்பின்போது விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

"காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், இன ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட செயல்களை அங்கீகரிப்பது போலாகிவிடும். ஆகவே, இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக் கூடாது, குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது' என்று தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு, இந்திய வெளியுறவு அமைச்சராக இருந்த எஸ்.எம். கிருஷ்ணா 2012, ஜனவரியில் இலங்கை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக