ஞாயிறு, 22 ஜூலை, 2012

நீதிமன்றங்கள் தாக்கப்பட்டால் சுதந்திரம் பாதிக்கப்படும்!

நீதிமன்றம் மீதான தாக்குதல் இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் இதுவரையில் இடம்பெற்றிராத அநாகரிக செயல் எனவும் இச்சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் தொடர் கதையாகவே இருக்கும் எனவும் மன்னாரின் சிரேஷ்ட சட்டத்தரணியும் மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருமான இ. கயஸ் பல்டானோ தெரிவித்திருக்கின்றார்.
சட்டத்துறையில் ஏறத்தாள 48 வருடங்களாகப் பணியாற்றிவரும் சட்டத்தரணி இ.கயஸ் பல்டானோ மேலும் தெரிவிக்கையில், இதுவரையில் இலங்கை வரலாற்றில் மன்னார் நீதிமன்றம் தாக்கப்பட்டதைப் போன்ற சம்பவங்களை தான் பார்த்ததுமில்லை கேள்விப்பட்டதும் இல்லை.
மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் மன்னார் சட்டத்தரணிகள் இரண்டாவது நாளாகவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். இதுதொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் 'எமது மன்னார் மாவட்டத்தில் நீதிமன்றம் தாக்கப்பட்டிருக்கின்றமை மிகவும் கவலைக்குரியது இது வன்மையாகக் கண்டிக்கப்படவும் வேண்டியது.
ஏனெனில் நீதிமன்றத்தில்தான் மக்களுக்கு நீதி கிடைக்கின்றது. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதும் நீதிமன்றங்கள்தான். அப்படிப்பட்ட நீதிமன்றங்களே தாக்கப்படுவதாக இருந்தால் பொதுமக்களின் சுததந்திரமும் பாதிக்கப்படுவதாகவே அமையும்.
அரசியல் யாப்பின்படி நாடாளுமன்ற சட்டங்களானது நீதிமன்றங்களின் ஊடாகத்தான் நடந்துகொண்டிருக்கின்றது. மக்களுடைய நீதி நிர்வாகக் கடமைகளை நீதிமன்றங்கள்தான் செய்து கொண்டிருக்கின்றன.
அதே மக்கள் நீதிமன்றங்களை அவமதிப்பதாக இருந்தால் அது தங்களது கையாலேயே தங்கள் கண்களைக் குத்துவது என்றுதான் சொல்ல வேண்டும்.
நீதிமன்றத் தீர்ப்பில் ஏதும் பரிகாரம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான முறையிருக்கின்றது. அவைதான்; மேல்முறையீடு போன்ற சட்ட வழிகள். எல்லா வழக்குகளிலும் எல்லோரும் வெல்வது கிடையாது .ஏதோ ஒரு பகுதி தோற்கத்தான் செய்யும்.
அவ்வாறான சூழ்நிலையில் மேல்முறையீடு செய்வது அல்லது மீளாய்வு செய்வது ஒன்றுதான் சட்டத்தால் இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற ஒரு நிவாரணமாக இருக்கின்றது.
அவ்வாறான சட்டரீதியான நிவாரணத்தை இவர்கள் மேற்கொள்ளாமல் வன்செயலில் ஈடுபடுவது காட்டுமிராண்டித்தனத்திற்கே கொண்டு செல்கின்றது.
இப்படிபட்ட விடயங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.இது தவிர நீதவானைத் தனிப்பட்ட ரீதியில் தூசித்தமையும் யாரும் மன்னிக்க முடியாத ஒரு காரியமாகவே அமைகின்றது.
எனவே இவற்றைக் கண்டித்து எதிர்காலத்திலே எமது நீதித்துறைக்கு இதுபோன்ற சம்பவங்கள் இலங்கையில் நடக்கக்கூடாது என்ற நோக்கோடு இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
மன்னார் நீதிமன்ற விவகாரம் தொடர்பாக தக்க நடவடிக்கைகள், உரிய நிவாரணம் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் வரையிலும் மன்னார் போராட்டம் நடந்துகொண்டேயிருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இலங்கையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களினால் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உயரதிகாரிகளின் அசமந்தப்போக்கின் காரணமாகத்தான் இப்படியானதொரு துர்ப்பாக்கியநிலை நடந்தேறியிருக்கின்றது.
சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகளுக்கு அதாவது அவர்களுடைய கடமையை உணரவைக்கும் வரையிலும், அரசாங்கம் சம்பந்தப்பட்ட குழப்பக்காரர்களுக்கு எதிராகப் போதிய நடவடிக்கை எடுக்கும் வரையிலும் எமது இந்தப் போராட்டம் தொடரும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக