ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

ஆடு மாடுகளைப்போல நம்மவர்கள் அடித்து கொல்லப்படும்போது இலங்கையன் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்படுகிறேன்!

தென்னிலங்கையில் ஆடுகளை அறுக்க வேண்டாம் என்றும், மாடுகளை வதைக்க வேண்டாம் என்றும், கட்டாக்காலி நாய்களை சுட்டு கொல்ல வேண்டாம் என்றும் மிருக வதை தடுப்பு இயக்கம் நடத்துகிறார்கள். ஆனால், தமிழர்களை அரசின் கட்டுப்பாட்டில் நடத்தப்படும் சிறைச்சாலை வளாகத்திற்கு உள்ளே வைத்தே அடித்து கொல்லுகிறார்கள்.
இலங்கை குடிமகன் என்று சொல்வதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது. இலங்கையில் நான் ஒரு தமிழன் என்று சொல்லி முடிப்பதற்குள் எனது நெஞ்சம் கொதிக்கிறது. இங்கே கொல்லப்பட்ட இந்த அரசியல் கைதி ஒரு தமிழன் என்பதால்தான் கொல்லப்பட்டார் என்ற உண்மை என் இதயத்தை தாக்குகிறது என கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதி மரியதாஸ்தில்ரொக்சனின் மரணசடங்கின் போது உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், மக்கள் கண்காணிப்பு குழு அழைப்பாளருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பாஷையூர் கிராமத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற, மரியதாஸ் தில்ரொக்சனின் மரணசடங்கில் மேலும் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,
இன்னொரு கொலை, இன்னொரு இறுதி சடங்கு, இன்று இறுதி உரை என்று தமிழனின் வாழ்வு தொடங்கி முடிகிறது. எமது எந்த உரையும், ஆறுதல் மொழிகளும் இங்கே அழுது புலம்பும் டில்றோக்சனின் தாயின் துன்பத்தை குறைத்துவிடப்போவதில்லை. அதற்கு காலம்தான் பதில் அளிக்கவேண்டும்.
டில்றோக்சன் தெருவில் சுட்டுகொள்ளப்படவைல்லை. வெள்ளை வேனில் கடத்தி செல்லப்படவில்லை. அப்படி ஏதும் நடந்தாலாவது அரசாங்கம் விசாரணை நடத்துகிறோம் என வழமையாக சொல்வதை சொல்லி காலம் கடத்தலாம். ஆனால் இங்கே இந்த கொலை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறை வளாகத்தில் நடந்துள்ளது. இவரை இவர்கள் திட்டமிட்டு அடித்து கொலை செய்துள்ளார்கள். சில வாரங்களுக்கு முன் இன்னொரு கைதியான நிமலரூபனையும் கொன்று முடித்தார்கள்.
படுகாயப்பட்டு சுய நினைவு இழந்தவரின் காலை கட்டிலின் காலுடன் சங்கிலியால் கட்டி வைத்தார்கள். இந்த கொடுமை இலங்கை திருநாட்டில் நடக்கிறது. இதை பார்க்கும் போது இலங்கையன் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இருக்கிறது. தமிழன் தேடி, தேடி அடித்து கொல்லப்படுவதை பார்க்கும் போது நெஞ்சம் கொதிக்கிறது.
இது முதற்கொலை இல்லை. இதுவே கடைசி கொலையாகவும் இருக்க போவதில்லை. இவர்கள் இன்னமும் கொலை செய்ய போகிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் முடிந்தபோனதாக சொல்லப்படும் யுத்தம் இன்னமும் முடியவில்லை. அன்று கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர் பறிப்புடன் இவர்களது ஆத்திரம் முடியவில்லை. அது இன்னமும் தொடர்வது நன்கு புரிகிறது.
இந்த நிலையில் எமக்கு எஞ்சி இருப்பது நமது மக்களை அணி திரட்டி போராடுவது என்பது ஒன்றுதான். ஜனநாயக போராட்டம் ஒன்றுதான் இன்று எமது ஆயுதம். சர்வதேசம் நியாயத்தையும், சுதந்திரத்தையும் நமக்கு வாங்கி தரும் என்று நாம் காத்திருக்க முடியாது. சர்வதேச கடையில் இலவசமாக எதுவும் கிடைக்காது. நாம் போராடினால் மாத்திரமே அவர்கள்
துணை வருவார்கள். இதுதான் உண்மை. இதைவிட வேறு உண்மைகள் கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக