மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் வாக்களிப்பு மந்தகதியில இருப்பதாகவும், முஸ்லீம் பிரதேசங்களில் சுறுசுறுப்பாக இருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் நண்பகல் 12மணியுடன் நிறைவடைந்த 5 மணித்தியாலங்களில் சராசரியாக 25வீத வாக்களிப்பு இடம்பெற்றிருப்பதாக மாவட்ட தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று திருகோணமலையிலும் நண்பகல்வரை 27வீதமான வாக்குகள் பதிவாகியிருக்கிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை பகுதிகளில் வாக்களிப்பு சுறுசுறுப்பாக காணப்படுகிறது. காலையிலிருந்தே சில வாக்குசாவடிகளில் நீண்டவரிசையில் நின்று மக்கள் வாக்களித்தனர். காத்தான்குடியில் நண்பகல் 11மணியளவிலேயே 30வீத வாக்களிப்பு இருந்ததாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் தமிழ் பிரதேசங்களில் வாக்களிப்பு மிகவும் மந்த கதியிலேயே காணப்படுகிறது. தமிழ் கிராமப்புறங்களில் ஓரளவு மக்கள் வாக்களித்தாலும் மட்டக்களப்பு நகரப்பகுதியான புளியந்தீவு, கோட்டைமுனை பகுதியில் நண்பகல்வரை வாக்களிப்பு மிகவும் குறைவாக இருப்பதாக நமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மட்டக்களப்பு படுவான்கரை கிராமங்களில் தற்போது தங்கியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது கிராமப்புறங்களில் வாக்களிப்பு வீதம் குறைவாக இருந்த போதிலும் வாக்களிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள் என கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக