சனி, 1 செப்டம்பர், 2012

ஜெயானந்தமூர்த்தியின் மலட்டு அரசியலை எல்லோரும் புரிந்து கொள்வர்- கனடா நக்கீரன்




!

வெளிநாட்டில் இருந்து கொண்டு தேர்தல் காலத்தில் அறிக்கைகளை விட்டு தனது இருப்பை விளம்பரப்படுத்துவது ஜெயானந்தமூர்த்திக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. அவரது அறிக்கை அவர் இப்போதும் ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவன் என்கிறார். யார் இல்லை என்றது? அதற்காக ததேகூ எனக்குத்தான் சொந்தம் என்று இலண்டனில் இருந்து கொண்டு அறிக்கை அரசியல் நடத்தும் ஜெயானந்தமூர்த்தி சொல்லலாமா? இது வீடு கட்டின கொத்தனார் தனக்குத்தான் வீடு சொந்தம் என்று சொன்னது மாதிரி இல்லையா?
இந்த அறிக்கையை வாசிப்பவர்கள் ஜெயானந்தமூர்த்தியின் மலட்டு அரசியலைப் புரிந்து கொள்வார்கள்.
தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு புறக்கணித்தால்தான் தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையிலேயே உறுதியுடன் உள்ளனர் என்பதைத் தெளிவுபடுத்த முடியும்’ என்றும் உளறுகிறார். 2008 இல் நடந்த மாகாணசபைத் தேர்தலை ததேகூ பாதுகாப்புக் காரணமாகப் புறக்கணித்த படியால்தான் பிள்ளையான் முதலமைச்சர் ஆனார் என்ற எளிய அரசியல் உண்மை கூடவா இவருக்குப் புரிய மாட்டேன் என்கிறது? இது குழப்ப அரசியலின் உச்ச கட்டம் இல்லையா?
1994 ஆம் ஆண்டு வி.புலிகள் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்த போதுதான் டக்லஸ் தேவானந்தா 12,000 வாக்குகளோடு 9 இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் போக நேர்ந்தது. அமைச்சராகவும் முடிந்தது. பதினேழு ஆண்டுகள் கழித்தும் சிங்கள எசமானர்களுக்கு சேவகம் பார்க்கவும் முடிந்தது. இதைத்தான் ஜெயானந்தமூர்த்தி விரும்புகிறாரா?
2005 இல் நடந்த ஆட்சித் தலைவர் தேர்தலை வி.புலிகள் உத்தியோகப் பற்றற்ற முறையில் புறக்கணித்தார்கள். வேண்டும் என்று அவர்கள் பிழைவிடவில்லை. ஆனால் போட்ட கணக்குப் பிழைத்துவிட்டது. விளைவு? மகிந்த இராசபக்சே வெறுமனே 180,786 வாக்குகளால் வெற்றி பெற்றார். ஆட்சிக் கட்டில் ஏறிய வி.புலிகளையும் ஒழித்துக் கட்டினார். அதன்பின் நடந்த ஆட்சித்தலைவர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத்தேர்தல் என்று எல்லாத் தேர்தல்களிலும் வெற்றிபெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு இன்று கோலோச்சுகிறார். சிங்களவர்கள் அவரை நவீன துட்டகைமுனு எனக் கொண்டாடுகிறார்கள்.
அரசியலில் ஒன்று ஈணத் தெரிய வேண்டும் அல்லது நக்கத் தெரிய வேண்டும். இரண்டும் தெரியாவிட்டால் யாருக்கு என்ன பயன்?
இப்படித்தான் யாழ்ப்பாண மாநகரசபை, ஆட்சித்தலைவர் தேர்தல் (2010 சனவரி) களைப் புறக்கணிக்குமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பரப்புரை செய்தார். பின் அவரே நாடாளுமன்றத் தேர்தலில் (2010 ஏப்ரில்) போட்டியிட்டு கட்டுக்காசையும் இழந்தார். 2004 பொதுத் தேர்தலில் கிடைத்த விருப்பு வாக்குகள் மாயமாய் மறைந்துவிட்டன.
இப்போது நடக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கஜேந்திரகுமாரோ அவரது ததேமமு கேட்கவில்லை. அந்தளவில் அவருக்கு அரசியல் ஞானம் பிறந்திருக்கிறது. ஜெயானந்தமூர்த்திதான் எப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் பாடம் படிக்கமாட்டேன் நான் மக்கு மாணவன் என அடம் பிடிக்கிறார். பஞ்சபாண்டவர் எத்தனை பேர் என்று கேட்டால் கட்டில்கால் போல் நான்கு என்கிறார்.
அது சரி. மட்டக்களப்பு மக்கள் என்று ஒருமுறைக்குப் பலமுறை சொல்கிறாரே? திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களை ஏன் விட்டுவிட்டார்? அவை அவரது சொந்த மாவட்டம் அல்ல என்பதாலா?
‘புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒருசிலர் (முன்ளாள் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள்) கூட்டமைப்புக் கிளைகளை அமைத்துக் கொண்டு கூட்டமைப்புக்கு புலம் பெயர் தமிழ் மக்கள் ஆதரவு எனக் கூறிவருவதும் அறிக்கைகள் விடுவதையும், கூட்டங்கள் நடத்துவதும் மாகாணசபைத் தேர்தலுக்கு கூட்டமைப்பு செல்வதே சிறந்த சிந்தனை என்று கூறுவதையும் எமது தாயக மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்’ என்று கடிக்கிறார். அவர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் முன்னாளில் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் பின்னாளில் வி.புலிகள் ஆதரவாளர்கள். சரி அதையாவது அவர்கள் செய்கிறார்கள். ஜெயனந்தமூர்த்தி என்ன செய்கிறார்? தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் இலண்டனில் அமைப்பை நிறுவி தனித் தமிழீழத்துக்குப் போராடுகிறாரா?
ஏற்கனவே சொல்லியது போல ஒன்றில் ஈணத் தெரிய வேண்டும் இல்லையேல் நக்கவாவது தெரிய வேண்டும். இரண்டும் தெரியாவிட்டா அது சுத்த ‘வேஸ்ட்!’
மாகாணசபை ஒன்றுக்கும் உதவாது என்றால் ஒற்றையாட்சி சிறீலங்கா நாடாளுமன்றமும் உதவாதுதான். 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் ததேகூ உறுப்பினர்கள் தொகை 13 மட்டுமே!
எமது மக்கள் எமது மக்கள் எனச் சொல்லுகிறாரே அந்த ‘எமது மக்கள் யார்?’ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியனேந்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், பொன் செல்வராசா அப்படிச் சொன்னால் கூட அதில் பொருள் இருக்கிறது. காரணம் அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள்! ஜெயானந்தமூர்த்தி எந்த மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்று சொல்ல முடியுமா?
தேசியத்தலைவர் படத்தை எரித்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி ‘புகழ்’ பெற்ற ஜெயானந்தமூர்த்தி இலண்டனில் பத்திரமாக இருந்து கொண்டு எனக்குத்தான் எல்லாம் தெரியும், நான்தான் அரசியல் ஞானி, ததேகூ தலைவர்கள், ஆதரவாளர்கள் அறிவிலிகள் என அறிக்கை விடுவது அவருக்கு ‘ஓவராக’ த் தெரியவில்லையா? என் போன்றோருக்கு அப்படித்தான் தெரிகிறது!
புலத்தில் பத்திரமாக இருந்து கொண்டு அய்யகோ இந்த ததேகூ தனிநாட்டுக் கோரிக்கையை விட்டுவிட்டது அடுக்குமா இந்த அநினயாயம் என்று புலம்புகிறா ஜெயானந்தமூர்த்தி இலங்கை சென்று தமிழீழக் கோரிக்கையை முன்வைக்க அணியமாக இருக்கிறாரா?
முடிவாக சென்ற காலம் போல் அரசியல் செய்ய முடியாது. நாம் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறோம். எமது மண் பறிக்கப்படுகிறது. வடக்கும் கிழக்கும் இராணுவமயப்படுத்தப் படுகிறது. பவுத்த மயப்படுத்தப்படுகிறது. சிங்கள மயப்படுத்தப்படுத்தப் படுகிறது. இன்று எமது கையில் வாக்கு என்ற ஒரே ஆயுதம்தான் இருக்கிறது. அதனைப் பயன்படுத்த வேண்டும். அற்பசொற்ப அதிகார மையங்களை நாம் கைப்பற்ற வேண்டும். பிரதேச சபைகளை ததேகூ முற்றாக கைப்பற்றியிருப்பது எமக்குப் பலமா? இல்லையா?
மாகாணசபை நோஞ்சானாக இருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் துரும்பும் பல்லுக்குத்த உதவும். பற்றையில் இருக்கிற இரண்டு பறவைகளைவிட கையில் இருக்கிற ஒரு பறவை மேலானது. மகிந்த இராசபக்சே காணி அதிகாரத்தை மாகாணசபைகளிடம் இருந்து புடுங்க முனைந்தபோது வட மத்திய மாகாணம்தான் மறுத்தது. இல்லாவிட்டால் தனியார் காணிகள் கூட திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் பொருளாதார, சமூக, வரலாறு, தொலியல், சுற்றுச்சூழல் மற்றும் சமய நோக்கங்களுக்கு (The legislation gives the central government to take over lands within municipal and urban areas for economic, social, historical, archaeological, environmental and religious purposes) அரசு கேட்டுக் கேள்வியின்றி எடுத்திருக்க வழிபிறந்திருக்கும்.
இதற்கு மேல் ஜெயானந்தமூர்த்தியின் சொத்தை வாதங்களுக்கு பதில் கூறுவது நேர மெனக்கேடு என நினைக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக