மாகாணசபை முறைமை முழுமையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனக்கூறும் ஜனாதிபதி 13ஆவது திருத்தச் சட்டம் ஒழிக்கப்படுமா இல்லையா? என்பதை வெளிப்படையாகக் கூறவேண்டும் என நாடாளுமன்றத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
'கடந்த மூன்று வருடங்களாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர், சர்வதேச மனித உரிமைகள் பேரவை என்பவற்றுக்கும் இந்திய அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் சுயமாகவே அளித்த அனைத்து வாக்குறுதிகளிலும் இருந்து இந்த அரசு விலகிச் செல்கின்றது'' என அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
வரவு செலவுத்திட்ட உரை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சுமந்திரன் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்ட உரை நாட்டின் பொருளாதாரம் தொடர்பானதாக இருந்ததை விட அரசியல் விமர்சனமாகவே இருந்தது. சந்தேகம்அரசியல் தீர்வு தொடர்பாக, மாகாணசபை முறைமை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் கூற்று மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த காலங்களில் அளித்த வாக்குறுதிகளில் இருந்து விலகிச் செல்வதையே அது காட்டுகிறது. 2009 ஆம் ஆண்டு மே 26 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையை இங்கு தொட்டுக் காட்டுகிறேன்.
'13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசு கூடுதலான அக்கறையுடன் செயல்படும். அதிகாரப் பகிர்வின் மூலம் நிரந்தரமான சமாதானம் ஏற்படுத்தப்படும்'' என அந்த அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
2009 மார்ச் மாதம் சர்வதேச மனித உரிமைகள் சபையில் பேசிய ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி மஹிந்த சமரசிங்க, ''தீர்க்கப்படாத இனப்பிரச்சினையால் நாடு மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி மாநாட்டின் மூலம் நிரந்தரமான தீர்வு அவசியம்'' என்றார். பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டுக் கலைந்தது.
ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி பரிந்துரைகளையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவுக்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் என்ன கூறினார்? தமிழ்க் கட்சிகளுடன் துரிதமான பேச்சுக்களை நடத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கும் மேலாக அதிகாரப் பரவலாக்கம் மேற்கொள்ளப்படும் என்றார்.
இத்தோடு நின்றுவிடவில்லை. இந்த ஆண்டின் முற்பகுதியில் பெப்ரவரி மாதம் இங்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் 13 ஆவது திருத்தச் சட்டம் மேலும் உறுதிப்படுத்தப்படும் என்றும் கூறினார். வாக்குறுதிகள் காற்றில் கடந்த மூன்று வருடங்களாக வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் முற்றாக மீறப்பட்டுள்ளன.
ஒருசிறு பகுதி கூட நிறைவேற்றப்படவில்லை. இந்த அரசு தமிழர்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றியே வந்துள்ளமை இப்பொழுது உறுதியாக்கப்பட்டுவிட்டது.
நேற்று இந்தச் சபையில் உரையாற்றிய ஜனாதிபதி எமது நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க நாம் வெளியே செல்லவேண்டிய அவசியம் இல்லை. வெளித் தலையீடுகளும் தேவை இல்லை. எமது பிரச்சினைகளை நாமே சுயமரியாதையுடன் தீர்க்க முடியும் என்றார்.
அப்படியானால் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதிலும், இதுவரை அளித்த உறுதி மொழிகளிலும் இருந்து அவர் விலகிச் செல்வதாகவே தெரிகின்றது. சர்வதேசத்தை மதியுங்கள் நாம் சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் இருக்கின்றோம். எல்லா நாடுகளின் நட்புறவும் அவசியம்.
எமக்குத் தேவைப்படும் போது இந்தியாவைப் போற்றுவதும், தேவையில்லை என்றால் தூற்றுவதும் தவறு. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் சர்வதேசதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கான முழுப்பொறுப்பையும் இந்த அரசே தீர்க்க நேரிடும் என சுமந்திரன் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக