அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை திருத்துவதா? அல்லது அதனை இரத்துச் செய்வதா? என்பது தொடர்பில் தமிழ்க் கட்சிகள் அடங்கலாக சகல கட்சிகளுடனும் பேசுவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இவ்விடயத்தை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்க அரசாங்கம் விரும்புகின்றது. அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் 13-வது திருத்தத்தை ரத்துச் செய்யக் கோரினாலும் இது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்து அல்ல. அரசாங்கத்தின் கருத்து, மகிந்த சிந்தனையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அரசாங்கம் 13-வது திருத்தம் பற்றிப் பேச தயாராக உள்ளது. கிராம சபை, மாவட்ட சபை மற்றும் மாகாண அரசாங்கங்கள் பற்றியும் பேச அரசாங்கம் தயாராக உள்ளது. ஆயினும் ஒற்றையாட்சி நாடு என்ற அடிப்படையிலேயே எந்தவொரு தீர்வும் அமைய வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தும். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு எதிர்க் கட்சியினர் அங்கத்தவர்களை நியமிக்காததனால் அது செயற்படாது உள்ளது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து அவசரமாக 13-வது திருத்தம் செய்யப்பட்டதையும் அதில் குறைபாடுகள் உள்ளதையும் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுள்ளது. எனவே இலங்கைக்கே உரித்தான ஒரு அதிகாரப் பகிர்வு முறையை அரசாங்கம் உருவாக்கும் என்பதை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு தெளிவாக கூறியுள்ளது. மேலும் அரசாங்கம் தேசியப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தப்படுவதை வலுவாக எதிர்க்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக