சனி, 3 நவம்பர், 2012

ராஜபக்ச ஆட்சியில் பதின்மூன்று ப்ளஸ், மைனஸ் ஆகி இன்று பூஜ்யம் ஆகியுள்ளது: - மனோ கணேசன்


News Serviceபுலிகளை தோற்கடிக்க உலக நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் அவசரத்தில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பதிமூன்று "ப்ளஸ்" என்று காண்பவர்களிடம் எல்லாம் சொல்லி வந்தார். அதன்பிறகு மாகாணசபை அதிகாரங்களை பறித்தெடுக்க பசில் ராஜபக்ச, திவி நெகும சட்டமூலத்தின் மூலம் பதிமூன்று "மைனஸ்" என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தினார்.
இன்று, கோதாபய ராஜபக்ச இந்த அதிகாரப்பகிர்வு எதுவுமே வேண்டாம் என மாகாணசபைகளையே அகற்றிவிடும் பதின்மூன்று "பூஜ்யம்" என்ற நிலைக்கு தமது அரசாங்கத்தை கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். இதுதான் ராஜபக்ச குடும்ப ஆட்சியில், "ப்ளஸ், மைனஸ் ஆகி கடைசியில் பூஜ்யம்" ஆன கதை. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஒரு அரசியல் மோசடியாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, யுத்தம் முடிந்த சில நாட்களில் இலங்கை வந்த ஐநா செயலாளர் நாயகத்தில் ஆரம்பித்து, இந்திய பிரதமர் வரை பதின்மூன்றை விட அதிகமாக வழங்கப்போகின்றேன் என பலமுறை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சொல்லிவந்தார்.

பதின்மூன்று சரி, அந்த மேலதிகம் என்ன என நாம் கேட்கும் அளவுக்கு நிலைமை அன்று இருந்தது. இந்நிலையில்தான், பதின்மூன்று பெற்று எடுத்த செல்லப்பிள்ளையான மாகாணசபைகளின் அதிகாரங்களை படிப்படியாக இந்த அரசாங்கம் பிடுங்கி எடுக்க தொடங்கியது.

சுகாதாரத்துறை, கல்வித்துறை, விற்பனைவரி அதிகாரம் ஆகியவை படிப்படியாக மத்திய அரசாங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. நில அதிகாரம், காவல்துறை அதிகாரம் ஆகியவை ஒருபோதும் அமுலுக்கு வரவில்லை. இந்நிலையில், இன்று இருக்கும் பெருந்தொகை அதிகாரங்களை மீண்டும் பறித்து எடுத்து, வட மாகாணசபை அமைவதற்கு முன்னால் மாகாணசபைகளை வெறும் எலும்புக்கூடுகளாக மாற்றிவிடும் கைங்கரியத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ச இறங்கியுள்ளார்.

இதை எல்லாம் மிஞ்சிவிடும் போக்கில், பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச, பதின்மூன்றையும், அது பெற்றெடுத்த குழந்தை மாகாணசபைகளையும் முழுமையாக அகற்றி விட வேண்டும் என சொல்லத்தொடங்கிவிட்டார். தனக்கு துணையாக, விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்த்தன ஆகிய அமைச்சர்களையும் அழைத்துக்கொண்டு இந்த அரசாங்க அதிகாரி, அரசியல்வாதியாக செயல்பட தொடங்கிவிட்டார்.

எனவேதான், யுத்தத்தை நிபந்தனை இல்லாமல் ஆதரித்து அப்பாவி தமிழ் மக்கள் சாவதற்கு துணைபோய்விட்ட அமெரிக்கா முதல் இந்தியா வரை முன்னணி உலக நாடுகளுக்கு இது இன்று தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஒரு அரசியல் மோசடியாகும். இதை அனுமதித்தால், இனிமேல், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை உலகின் ஒரு குட்டி நாடுகூட மதிக்காது என்பது இன்று சுவரில் எழுதப்பட்டுள்ள உண்மை ஆகிவிட்டது.

இலங்கையில் பாதிக்கப்பட்டுள தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லாவிட்டாலும்கூட, சர்வதேசிய ரீதியாக தமது அதிகாரம் மற்றும் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்து விட கூடாது என்ற அக்கறை இந்த நாடுகளுக்கு நிச்சயம் உண்டு.

இந்நிலையில், இலங்கை என்ற குட்டி நாடு, தங்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டது என்ற செய்தி உலகில் தமது செல்வாக்கை சரியச்செய்யும் என்ற அச்சம் இன்று உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதை நாம் ஐநா செயற்பாட்டில் இன்று பார்க்கிறோம். அடுத்த மார்ச் வரும்போது இதை இன்னும் அதிகம் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக