பிரான்ஸ் தலைநகர் பரிஸில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர்
பரிதி என்றழைக்கப்படும் நடராசா மதிந்திரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பரிஸ் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பரிதி என்றழைக்கப்படும் நடராசா மதிந்திரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பரிஸ் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் நடந்த போது பரிதியின் மனைவியும் பிள்ளையும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்திலேயே இருந்துள்ளனர். அவர் மனைவி பிள்ளைகளை அலுவலகத்தில் விட்டுவிட்டு தனது வீட்டிற்கு சென்றிருக்க முடியாது. அவர் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்லும் போது சுட்டுக்கொல்லப்பட்டார் என கூறுப்படுவதை காவல்துறையினர் மறுத்துள்ளனர். அவரை யாரோ அழைத்திருக்கிறார்கள். அவரை சந்திப்பதற்காகவே பரிதி அலுவலகத்திலிருந்து கீழே இறங்கி சென்றுள்ளார். பரிதியை சந்திக்க வந்த நபர் யார் ? யாரின் அழைப்பின் பேரில் பரிதி அலுவலகத்தை விட்டு வெளியில் சென்றார் ? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என் அதிர்வு இணையம் அறிகிறது.
பரிதி சுட்டுக் கொல்லப்பட்ட அந்த இடத்தில், வாகனம் தரித்து நிற்க முடியாது. பரிதி அலுவலகத்தை விட்டு கீழே இறங்கி வருகிறார் என்ற தகவலை சரியாக அறிந்தவர்களே அந்த இடத்திற்கு வந்து துப்பாக்கி பிரயோகத்தை செய்துள்ளனர் என்பது புலனாகிறது. அவர் அலுவலகத்தை விட்டு வெளியில் செல்கிறார் என்பதை, கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்தது யார் ? அல்லது பரிதியை வெளியே அழைத்து யாராவது இக்கொலையை செய்தனரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இதேவேளை இன்னொரு சந்தேகமும் காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் சிறிலங்கா அரசாங்க புலனாய்வு பிரிவினருடன் நெருங்கி செயற்படும் ஒருவரும் அண்மையில் பாரிசுக்கு வந்திருப்பதாகவும் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
இதேவேளை அரசியல்வாதி ஒருவரும் பரிசிற்கு வந்துள்ளார். இவர் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்து கொள்ள வந்ததாக கூறப்பட்டாலும், மாவீரர்நாள் நடைபெறுவதற்கு 20நாட்களுக்கு முதல் ஏன் வந்தார், மற்றும் இவர் மாவீரர் நாளில் கலந்துகொண்டு விட்டு எவ்வாறு திரும்பி இலங்கை செல்வார் ? என்றும் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக பிரான்ஸில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவிக்கின்றார். இவர் சிறிலங்கா புலனாய்வு பிரிவினருக்கும் தகவல்களை வழங்கிக்கொண்டு விடுதலைப்புலிகளுடனும் தொடர்பை பேணி வருகிறாரா, இவர்தான் பரிதியின் நடமாட்டம் பற்றிய தகவல்களை வழங்கினாரா ? என்றும் பிரான்ஸ் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
எது எவ்வாறு இருந்தாலும், இந்த விசாரணைகளில் பிரான்ஸ் காவல்துறையினருக்கு சில தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், அதை உறுதிப்படுத்த தீவிர விசாரணைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் பிரான்ஸில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர் அதிர்வுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக