கிராமங்களில் வீடுவீடாகச் சென்ற இராணுவத்தினர் குடும்பத்தினரை அச்சுறுத்தியே தமிழ்ப் பெண்களை இராணுவத்துக்குச் சேர்த்துக்கொண்டனர். இராணுவத்தில் இணைவதற்குத் தேவையான பாடசாலை விடுப்புச் சான்றிதழ் மற்றும் கிராமசேவகரின் நற்சான்றிதழ் என்பனவும் இராணுவத்தினராலேயே பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவங்களால் கிளிநொச்சியே அதிர்ந்து போயிருக்கின்றது.
இராணுவத்துக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்வதாயின் அதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும். அதிலுள்ள நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஆட்சேர்ப்பு இடம்பெற வேண்டும். ஆனால், கிளிநொச்சியில் எந்தவிதமான பகிரங்க அறிவித்தலும் இல்லாமல் தமிழ்ப் பெண்கள் வலுக்கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக கிளிநொச்சியைச் சேர்ந்த அரச அதிகாரி ஒருவர் தமிழ்லீடருக்குத் தெரிவித்தார். இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டே இந்த கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றிருக்கின்றது எனவும் அவர் கூறுகின்றார். இது தொடர்பாகக் கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பனவாக உள்ளன.
போர் முடிவுக்கு வந்து கிளிநொச்சியில் மீள்குகுடியேற்றமும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும், கிளிநொச்சி தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றது. மக்கள் குடியிருப்புக்களுடன் இணைந்ததாக இராணுவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் பொதுமக்களின் வீடுகளுக்குள் சென்றுவரும் சம்பவங்கள் இங்கு சகஜமாகவே இடம்பெற்றுவருகின்றது. இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக